இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஜூன், 2017

இவற்றுக்கும் ரமலானுக்கும் என்ன தொடர்பு?

Related image

   - சிலருக்கு லெக்கின்ஸ் என்பது ஆபாச உடை, வேறு சிலர் அதில் தவறே இல்லை என்கிறார்கள்.
-    -    சிலருக்கு உயிரினங்களை கொன்று உண்பது பாவகரமான செயல், ஆனால் அவ்வாறு உண்பவர்களைப் பொறுத்தவரையில் அப்படி அல்ல.
-     -   மதுவினால் சீரழிந்த குடும்பங்கள் மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தும்போது மறுபுறம் அதற்கெதிராக மது அருந்துவது தனிமனித உரிமை என்று கூறி வேறொரு கூட்டம் மதுவிலக்குக்கு எதிராகப் போராடுகிறது..
-      -  காதல் என்பதைப் புனிதமானது என்பார் சிலர். “உங்கள் மகளை அவளுக்கு விருப்பமானவரைக் காதலிக்க விடுவீர்களா? என்று அவர்களில் யாரிடமாவது கேட்டால் “அதெப்படி முடியும்?” என்பார்.
-       -  நாங்கள் வெள்ளையர்கள், எங்கள் மொழியே உயர்ந்தது என்று வாதித்து கறுப்பினத்தவரை அடிமையாக்கினார்கள். 
-         -  ஒரு சாரார் நாங்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள், நாங்களே உயர்ந்த குலம் என்று வாதித்து மற்றவர்களை தீண்டாத்தகாதவர்களாக நடத்தினார்கள்.

 இவ்வாறு ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம், நிறத்துக்கு நிறம், நாட்டுக்கு நாடு என மக்கள் வெவ்வேறு விடயங்களில் ஒருவருக்கொருவர் முரண்பட்ட நிலைப்பாடு கொள்வதை நாம் அறிவோம். ஒருவருக்குப் பாவமாகப் படுவது மற்றவருக்கு புண்ணியமானதாகப் படுகிறது. ஒருவருக்குப் புனிதமானதாகப் படுவது மற்றவைக்கு பாவமாகவோ அருவறுபபானதாகவோ படுகிறது. இதில் யார் மற்றவர் மீது ஆதிக்கம் பெறுகிறார்களோ அவர்கள் தம் கருத்துக்கு இணங்காதவர்கள் மீது தம் அடக்குமுறைகளை அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் பலதரப்பட்ட மக்கள் இணைந்து நல்லிணக்கத்தோடு வாழவேண்டுமானால் அங்கு அனைவருக்கும் பொதுவான நியாயமான சட்டங்கள் இயற்றப்பட்டு அவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது தெளிவு.

நாட்டின் அமைதியின்மைக்கும்  நீதியும் நியாயமும் கேலிக்குரியதாவதற்கும் முக்கிய காரணம்  சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதைப் பற்றி தெளிவான அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்களே! பலதரப்பட்ட மக்களும் பல்வேறு விதமான ஜீவராசிகளும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இவ்வுலகில் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன.  அவற்றை நீதமாகப் பங்கிடக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமானால் அதற்கு பரந்த விசாலமான அறிவும் மிக ஆழமான நுண்ணறிவும் பக்குவமான தூரநோக்கும் அத்தியாவசியமானதாகும். இப்பரந்து விரிந்த உலகில் நீர்க்குமிழி போன்று வாழ்ந்து மறையும் ஆறடி மனிதனுக்கு அந்த இயல்புகள் இல்லை என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட அறிவும் ஆற்றலும் இவ்வுலகின் அதிபதியாகிய இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பது தெளிவு!
அந்த இறைவன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை. அதுவே இவ்வுலகில் தனிநபர் நல்லொழுக்கத்திற்கும் சமூகத்தில் அமைதிக்கும் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும்.
மட்டுமல்ல, ஆன்மீக ரீதியாக இவ்வுலகம் என்ற இந்தப் பரீட்சைக் களத்தில் இறைவன் எதைச் செய் என்று சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது. அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது! எந்த மனிதனும் மனிதர்களின் குழுக்களும் நீதிமன்றங்களும் சட்டசபைகளும் பாராளுமன்றங்களும் இன்ன பிற ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்களும் பாவ-புண்ணியங்கள் எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. காரணம் இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி இறைவன் மட்டுமே. அன்று அவனே நமது வாழ்க்கையில் நாம் செய்த புண்ணியங்களையும் பாவங்களையும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ விதிக்க இருக்கிறான்.
எனவே நமக்கு இம்மைக்கும் மறுமை வாழ்வுக்கும் நன்மை பயப்பது இறைவன் தரும் வாழ்வியல் சட்டங்களேயாகும். சரி எது தவறு எது நல்லது எது தீயது எது நியாயம் எது அநியாயம் எது என்பதைப் பிரித்தறிய இறைவன் எதை அளவுகோலாக தருகிறானோ அதுவே அதிபக்குவமானதும் பின்பற்றத் தக்கதும் ஆகும். இன்று இவ்வுலகில் வாழும் மக்களுக்காக இலட்சிய அளவுகோலை (ideal criterion) இறைவன் அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினான். அதுவே திருக்குர்ஆன் என்ற இறை அற்புதம். அந்த திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமே ரமலான் என்ற அரபு மாதம். அதை கொண்டாடும் விதமாகவே உலகெங்கும் முஸ்லிம்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருக்கிறார்கள்

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான  வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், ......,,(திருக்குர்ஆன் 2:185)
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html 
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

செவ்வாய், 6 ஜூன், 2017

அரசியல்வாதிகளுக்கு ஓர் இலட்சிய முன்மாதிரி

  அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதி என்றாலே அப்பட்டமான சந்தர்பவாதி என்ற பிம்பம் உண்டாகியுள்ள இந்த காலகட்டத்தில் தூய்மையான நேர்மையான அரசியலையும் அரசியல்வாதிகளையும் கற்பனை செய்துப்பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றே. ஆனால் அரசியல் மாசடைந்துள்ளது என்பதற்காக அதை ஒதுக்கிவைப்பது நாட்டுநலனுக்கு பெரும் கெடு விளைவிப்பது என்பது வெட்டவெளிச்சம். தகுதியற்றவர்களிடமும் கொள்ளையர்களிடமும் ஆட்சிப் பொறுப்பு சென்றடையும்போது ஏற்படும் தீய விளைவுகளைத்தான் இன்று முழுஉலகமும் அனுபவித்து வருகிறது. நாடாள்வோரின் தீராத பணவெறியும் சுரண்டல்களுமே உலகெங்கும் அப்பாவிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதற்கும் ஏழைமக்கள் பசியால் வாடுவதற்கும் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதற்கும் காரணமாகின்றன. அடங்காத பணவெறியும் தீராத புகழ்வெறியும் கொண்டலையும் ஆட்சியாளர்கள் நிறைந்த இவ்வுலகில் இவர்களுக்கு நேர்மாற்றமாக நடந்துகொண்ட ஒரு இலட்சிய ஆட்சியாளரைப் பற்றி இங்கே நினைவு கூருவோம், சற்றே ஒப்பீடு செய்து பாருங்கள்.

ஆட்சிப்பொறுப்பு என்ற உன்னத பதவி
ஒரு நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வளங்களுக்கும் செல்வங்களுக்கும் என அனைத்துக்கும் மேல் ஆதிக்கம் பெறுகிறார் அதன்  ஆட்சிப்பொறுப்பைப் பெறும் ஆட்சியாளர். தனக்கு மேல் யாரும் இல்லை, தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நிலை அது. ஆனால் நாட்டின் ஆட்சிப்பொறுப்பு தவறான கைகளை சென்றடையும்போது அவர்கள் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். பொதுச் சொத்துக்களை தங்களின் மற்றும் வாரிசுகளின் உடமைகளாக ஆக்கிக்  கொள்கிறார்கள்.  நாட்டு வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் சக்திகளுக்கு கைப்பாவைகளாக விலைபோகிறார்கள். இவர்களின் சுயநல நோக்கங்களுக்காக அனைத்து அடக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் கையாள்கிறார்கள். அதேவேளையில் இறையச்சம் – அதாவது தம் செயல்பாடுகளுக்கு இறைவனிடம் பதில் கூறியாகவேண்டும் - என்ற பொறுப்புணர்வு ஆட்சியாளர்களுக்கு வந்து விட்டால் நிலைமை தலைகீழாக மாறும். உத்தம அரசியல் அங்கு உருவெடுக்கும். பூமியும் அமைதிப் பூங்காவாக மாறும்.

அனைத்துத்துறைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாம்
அரசியல் உட்பட மனிதவாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இறைவன் இஸ்லாம் என்ற அவனது வாழ்வியல் நெறி மூலம் வழிகாட்டியுள்ளான். இறைவனின் இறுதித் தூதர் ஒரு இலட்சிய ஆட்சியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தன் வாழ்க்கை முன்னுதாரணம் மூலம் செயல்படுத்திக் காட்டினார்கள்.
= அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (திருக்குர்ஆன் 33:21)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத்தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)
அரசுக் கருவூலத்தின் மீது ஆதிக்கம் பெறும் ஒரு ஆட்சியாளர் என்ற வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டுச்சென்ற முன்னுதாரணம் நம்மை ஆச்சரியத்தின் விளிம்புக்கே கொண்டு செல்கிறது.

ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு இருக்கிறோம்.

மதீனாவில் நபிகள் நாயகத்திடம் ஆட்சித் தலைமையும் ஆன்மீகத் தலைமையும் ஒருசேர அமைந்திருந்தது. அதுவும் அன்றைய காலத்து  வல்லரசின் தலைவராக இருந்தார் நபிகளார். அவ்வாறு இருந்த போதும் நபிகளார் தனக்காக எளிய வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஆடம்பரத்தின் அருகில் கூட நெருங்கவில்லை. பலநாட்கள் பசியோடு கழித்திருக்கிறார்கள், கந்தைகளை உடுத்திருக்கிரார்கள், எளிய குடிசையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் இருந்து நாம் காணலாம்.

நெருப்பாகக் கொதித்த அரசுப்பணம்
அரசுப்பணத்தை மிக எச்சரிக்கையோடு கையாண்டார்கள் நபிகளார். தனக்கு மட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும் அரசுப்பணத்தை அறவே தடைசெய்தார்கள். ஆட்சித்தலைவர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் போதித்த இஸ்லாத்திற்கும் முரணான ஒன்றல்ல அது.

எல்லாம் இருந்தபோதிலும் அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் மட்டுமின்றி, தன் தலைமுறைகளுக்கும் அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள்.

உதாரணம் ஒன்று:

= நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு' என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. 'நாம் முஹம்மதின் குடும்பத்தார் ஜகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?' என்று பேரனிடம் கேட்டார்கள். நூல் : புகாரி 1485, 1491

‘பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது' என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள்.

உதாரணம் இரண்டு:

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித் தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நான் ஏன் அவசரமாகச் சென்றேன் தெரியுமா? அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்'  என்றார்கள். நூல் : புகாரி 851, 1221, 1430

மரணம் எந்த நேரத்திலும் ஏற்பட்டு விடலாம். ஏழைகளுக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டியை வீட்டில் வைத்து விட்டு மரணித்து விட்டால் குடும்பத்தினர் அதைத் தமக்குரியதாகக் கருதி விடக் கூடும். அவ்வாறு கருதி விடக் கூடாது என்று அஞ்சியே அவசரமாகப் புறப்பட்டுச் சென்று 'அது பொது நிதிக்குச் சொந்தமானது' என்று கூறி விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

உதாரணம் மூன்று:

= 'எனது படுக்கையில் ஒரு பேரீச்சம் பழம் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அது ஜகாத் நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிட்டிருப்பேன்' எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 2055, 2431, 2433

நபிகள் நாயகத்தின் வீடு பள்ளிவாசலுடன் ஒட்டி அமைந்திருந்தது. பள்ளி வாசலில் குவிக்கப்படும் ஜகாத் நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்களில் ஒன்றிரண்டு நபிகள் நாயகத்தின் வீட்டுக்குள் வந்து விழுந்திட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட சாப்பிட மாட்டேன் என்று அறிவிக்கிறார்கள். பொது நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட அதைத் தவிர்க்கும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர்.

தொடர்புடையோருக்கும் தடை
தாமும், தமது குடும்பத்தினரும் ஜகாத் நிதியைத் தொடாதது மட்டுமின்றி தம்முடன் தொடர்புடையவர்கள் கூட அதிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். இதைப் பின் வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

= மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை ஜகாத் நிதியைத் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்போது அபூ ராஃபிவு என்பாரும் அவருடன் செல்லலானார். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஜகாத் எனும் பொது நிதி நமக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஒரு சமுதாயத்தால் விடுதலை செய்யப்பட்டவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று குறிப்பிட்டார்கள். நூல்கள் : நஸயீ 2565, அபூதாவூத் 1407

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மனிதர்களில் சிலர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகளை வைத்திருப்பவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

'
அடிமைகளை விடுதலை செய்தால் விடுதலை செய்தவரே அந்த அடிமைக்கு வாரிசு' என்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும். அதாவது அந்த அடிமை மரணித்து விட்டால் அவரது சொத்துக்கள் விடுதலை செய்தவரைச் சேரும்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்டவர்தான் அபூ ராஃபிவு. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு வாரிசாகும் நிலையில் இருந்தார்கள். அவரும் ஜகாத் நிதியில் எதையும் பெறக் கூடாது என்பதற்காக அவரை ஜகாத் வசூலிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.

தனது சொத்துக்களையும் அரசுடமையாக்கிய புரட்சியாளர் 
அரசாங்கப் பணத்தைத் தமக்கோ, தம் குடும்பத்துக்கோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும் ஒரு அரசாங்கத்திலும் தமது வழித் தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரகடனம் செய்தது மட்டுமின்றி மற்றொரு புரட்சிகரமான பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

= எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக்காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது) என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள். நூல் : புகாரி 2776, 3096, 6729

நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா (ரலி) க்கு ஏற்பட்ட அனுபவம் அந்த மாமனிதரின் அப்பழுக்கற்ற தன்மையைப் பறை சாற்றும்.

நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களின் உற்ற தோழர் அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்களிடம் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா வந்தார். தமது தந்தை விட்டுச் சென்ற கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அபூபக்ரிடம் கேட்டார்.

'
எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்' என்று உங்கள் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே, அதை உங்களிடம் தர இயலாது. நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள். ஆயினும், நான் தர மறுப்பதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான்' என்று கூறி மறுத்து விட்டார். (நூல் : புகாரி 3093, 3094)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொது உடமையாக்கினார்கள்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாரிசுரிமையை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) இடம் கேட்டுப் பெறுவதற்காக உஸ்மான் (ரலி)யை அனுப்பத் திட்டமிட்டனர். அப்போது ஆயிஷா (ரலி) 'எனக்கு யாரும் வாரிசாக முடியாது; நான் விட்டுச் சென்றவை பொது நிதியில் சேர்க்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லையா?' என்று கேட்டு அம்முயற்சியைக் கைவிட வைத்தார். நூல் : புகாரி 6730

கடனாளியாக மரணித்த வல்லரசர்
அவரது ஆட்சிக்காலத்தில் வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திருந்து வாரி வழங்கிய அந்த மாமன்னர் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

= 'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 2068, 2096


மரணிக்கும் போது நபிகளார் விட்டுச் சென்ற சொத்துக்கள்:

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள். (நூல் : புகாரி 2739)

சனி, 3 ஜூன், 2017

ஏழையாகவே வாழந்ததேனோ எங்கள் நபியே?

Related image
நபிகளாரின் வறுமை நேசம்:
அகிலத்துக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகளாரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஆச்சரியம் மிக்கவை. அப்படிப்பட்ட ஆச்சரியங்களில் ஒன்று செல்வ செழிப்பின் போதும் அவர் வறுமை மீது கொண்ட நேசம். இவ்வுலகில் ஏழைகளாக வாழ்ந்தவர்கள் மறுமை வாழ்வில் அடைய இருக்கும் அளப்பரிய பாக்கியங்களை மிஃராஜ் என்ற விண்ணேற்ற நிகழ்வின்போது நேரடியாகக் கண்டார் நபிகளார். மட்டுமல்ல ஏழைகளின் உன்னத மறுமை நிலைபற்றிய செய்திகளை அவ்வப்போது இறைவனிடம் இருந்து கிடைக்கப்பெற்றார். அவற்றை மக்களுக்கு அறிவிக்கவும் செய்தார். நம்மில் யாருக்குத்தான் கீழ்கண்டவாறு பிரார்த்திக்க மனமோ தைரியமோ வரும்?
= இறைவா, என்னை ஏழைகளின் சுபாவத்தில் வாழவைப்பாயாக! ஏழ்மையான நிலையில் உலகிலிருந்து என்னை மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளின் கூட்டத்தில் மறுமையில் என்னை எழுப்புவாயாக!என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
ஏழைகளுக்கு எளிமையான சொர்க்கப் பிரவேசம்:
= இறுதித்தீர்ப்பு நாளில், நீங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கும் போது, “இந்தச் சமுதாயத்தின் ஏழை, எளியோர்கள் எங்கே?” என்று அறிவிப்புச் செய்யப்படும், (அறிவிப்பைக் கேட்டதும்) ஏழை, எளியோர்கள் எழுவார்கள்.நீங்கள் என்ன நற்காரியங்களைச் செய்தீர்கள்?” என அவர்களிடம் வினவப்படும். எங்கள் இரட்சகனே! நீ எங்களைச் சோதித்தாய், நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீ மற்றவர்களுக்கு செல்வத்தையும் , ஆட்சியையும், கொடுத்தாய்!என்று அவர்கள் கூறுவார்கள். நீங்கள் உண்மையே கூறினீர்கள்என்று இறைவன் கூறுவான். எனவே, மற்ற பொது மக்களுக்கு முன்னதாக அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். செல்வந்தர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் கடினமான கேள்வி கணக்குக் கேட்கப்படும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
இப்னு ஹிப்பான்)
= செல்வந்தர்களான முஸ்லிம்களைவிட ஏழை முஸ்லிம்கள் நாற்பது வருடங்கள் முன்னதாக சுவர்க்கத்தில் நுழைவார்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(
திர்மிதீ)
ஏழைகளின் பொருட்டால் உதவி
= .”பலவீனர்களில் என்னைத் தேடுங்கள், ஏனேனில், உங்களில் பலவீனர்களின் பொருட்டால்தான் உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப் படுகின்றன. உங்களுக்கு உதவி செய்யப்படுகிறதுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
அபூதாவூத்)
ஏழைகளோடு நளின நடத்தை:
மூன்று நற்பண்புகள் யாரிடம் உள்ளனவோ அவருக்கு அல்லாஹுதஆலா (கியாமத் நாளன்று) தன் அருள் என்னும் நிழலில் இடமளிப்பான். மேலும், அவரைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவை, பலவீனர்களுடன் நளினமாக நடந்து கொள்ளுதல், பெற்றோருடன் கருணை காட்டுதல், அடிமைக்கு (வேலையாட்களுக்கு) உபகாரம் செய்தல்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
திர்மிதீ)
பணக்காரர்கள் பொறாமைப்படும் நாள்
= இறுதித்தீர்ப்பு நாளன்று (உயிர் தியாகம் செய்த) ஷஹீதை கொண்டு வரப்பட்டு, விசாரணைக்காக நிறுத்திவைக்கப்படும். பிறகு தான தர்மம் செய்தவரை கொண்டுவரப்பட்டு அவரையும் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்படும். பிறகு உலகில் பல்வேறு சோதனைகள், சிரமங்களில் சிக்குண்டவர்கள் கொண்டு வரப்படுவர், அவர்களுக்காக மீஸான் (தராசு) வைக்கப்பட மாட்டாது, நீதிமன்றமும் அமைக்கப்படமாட்டாது. அவர்கள் மீது வெகுமதியும், கூலியும் மழையைப் போன்று பொழியப்படும், உலகில் சுகமாக வாழ்ந்தவர்கள் (இந்தச் சிறப்பான வெகுமதிகளைக் கண்டு) தங்கள் உடல்கள் (உலகில்) கத்தரிகளால் வெட்டப்பட்டிருந்தால் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருந்திருப்போமே!என ஆசைப்படுவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
சோதனைகளும் பாவமன்னிப்பும்

= உண்மை விசுவாசிகளான ஆண்
பெண்களில் சிலர் மீது இறைவன் புறத்திலிருந்து சோதனைகளும் விபத்துகளும் வந்து கொண்டே இருக்கும். சில சமயம் உயிர் மீது, சில சமயம் பிள்ளைகள் மீது, சில சமயம் செல்வத்தின் மீதும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும் அதன் காரணமாக அவருடைய பாவங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும். இறுதியில் அவர் மரணித்த பிறகு ஒரு பாவம் கூட இல்லாத நிலையில் இறைவனைச் சந்திப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
திர்மிதீ)

திங்கள், 29 மே, 2017

மறுமை வாழ்வினை நினைவூட்டும் மழை!



இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு நாத்திகர்களிடம் இருந்து பதில் கிடைக்காது. ஆனால் இறைவனின் இறுதிவேதம் தெளிவான பதிலைத் தருகிறது. தற்காலிகமான இவ்வுலக வாழ்வின் நோக்கமே மனிதனைப் பரீட்சிப்பதற்காக வேண்டிதான் என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உணரும் வண்ணம் திருக்குர்ஆன் தனது வாதங்களை முன்வைக்கிறது.
அதாவது இந்த உலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தோருக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும் 

  இவற்றை நம் புலன்களால் அறிய முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நம் புலன்களுக்கு எட்டவில்லை என்ற காரணத்துக்காக அவற்றை மறுத்து விட முடியுமா? அவ்வாறு மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா? புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும்? மேலும் இவற்றை மறுப்பதும் அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது இதுபற்றி ஆராயாமல் இருக்க முடியுமா?
அவ்வாறு பகுத்தறிவால் ஆராயும்போது மழையின் அன்றாட செயல்பாடுகளை ஆராய்வோர் மறுமை வாழ்வு என்பது சாத்தியமே என்பதை அறிவார்கள்:
= 22:63. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
= 41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை)  உயிர்ப்பித்தவனே,  நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக  உயிர்ப்பிக்கிறவன்;  நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
43:11. அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.

22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.