இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 10 ஜூன், 2016

அன்று பெய்தது தேன்மழை!


உலகெங்கும் வருடம் ஒருமுறை கொண்டாடப்படும் இந்த மனித சமத்துவ, சகோதரத்துவ விழாவின் பின்னணி என்ன?
இந்த மாதத்தில் ஒரு இரவு இருப்பதாகவும் அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது என்றும் அன்று வானவர்கள் இப்பூலோகம் வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் இறைவனின் திருமறை கூறுகிறது. அவ்விரவின் மகத்துவத்தை அடைவதற்காகவே இறை விசுவாசிகள் ரமலான் மாதத்தின் இறுதிப்பகுதியில் பத்து இரவுகள் பள்ளிவாசல்களில் முழுமையாகத் தங்கி இறைவழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
விசுவாசிகளின் தொழுகை, தானதர்மங்கள் போன்ற ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பொதுவாக பத்து முதல் எழுநூறு மடங்கு வரை அதிகமாக நற்கூலி வழங்கப்படுகின்றன. ஆனால் இம்மாதம் அவற்றிற்கு கணக்கின்றி நற்கூலிகள் வழங்கப் படுகின்றன.
இந்த ரமலான் மாதத்தின் சிறப்புக்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது!
அது என்ன? அதை அறிய வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிப்போம்...
அனைத்துமே ஆரம்பமானது அங்கே...
முஹம்மத் நபி அவர்கள் மக்கா நகரில் அன்று உயர்குலமாக அறியப்பட்டிருந்த  குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் மற்றும்  ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.
ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்நிறவெறிகோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
விடியலுக்கு ஏங்கிய உள்ளம்
இப்படிப்பட்ட சூழலில் அனைத்துமே அனைவருமே பாவங்களில் மூழ்கியிருப்பதால் நன்மை எது, நீதி எது, நியாயம் எது என்பதையே யாரும் சிந்திக்காமல் இருக்கும் நிலை! ஆனால் நபிகள் நாயகத்தின் மனம் மட்டும் அங்கு இதற்கோர் விடிவு பிறக்காதா என்று ஏங்கியது! அவரால் அந்த அசிங்க சூழலை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதன் விளைவாக அவர் மனம் தனிமையை விரும்பியது.
அவருக்கு அப்போது நாற்பது வயது நெருங்கியிருந்தது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்லத் தொடங்கினார். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபட்டார்கள்.
அன்று பெய்தது தேன்மழை!
இப்படிப்பட்ட அந்த சூழலில்... அந்த ரமலான் மாதத்தின் ஒரு இரவில்தான்... அந்த பேரற்புதம் நிகழ்ந்தது! ஆம் மனித வரலாற்றின் போக்கை மாற்றி எழுதிய அந்த அற்புதம்! விண்ணும் மண்ணும் உறவைப் புதுப்பித்துக்கொண்ட அற்புதம்!  வருடங்களாக வறண்டு கிடந்த வானம் பார்த்த பூமியின்மேல் வான்மழை பொழிந்தால் எப்படியிருக்கும்? அதுவும் பொழிந்தது தேன்மழையாக இருந்தால் கேட்கவும் வேண்டுமோ? ஆம்  அன்று பெய்த தேன்மழை அன்றோடு நின்று விடவில்லை. தொடர்ந்து பெய்தன அத்தேன் துளிகள்! நபிகளார் இப்புவியில் நடமாடிய காலம் வரை தொடர்ந்து சிறுகச்சிறுகப் பெய்தன அந்த அமுதத்தின் துளிகள். நபிகளாரின் இதயத்தில் சேகரமான அந்த  தேன்துளிகளின் தொகுப்பே இன்று உலகெங்கும் பரவி நிற்கும் திருக்குர்ஆன் என்ற வான்மறை!
அதைப்பற்றி அந்த வான்மறையில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
97:1- 3. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.

ஆம், அது அவ்விரவு ஆயிரம்  மாதங்களைவிட மேலோங்கி நிற்கிறது. அந்த அருள் நிரம்பிய இரவும் அது கொண்டுவந்த அருட்கொடையும் இந்த பூமியில் விளைவித்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமா?
-------------------------
தொடர்புடைய ஆக்கங்கள்:

ரமலான் - இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்!

http://quranmalar.blogspot.com/2014/07/blog-post_10.html

உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post.html


திங்கள், 6 ஜூன், 2016

நோன்பும் நோக்கமும் மாண்பும்


நோன்பு என்பது இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக பசி, தாகம், இச்சை இவைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அதாவது விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் நேரம் வரை - கட்டுப்படுத்திக் கொள்வதாகும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது, (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (திருக்குர்ஆன் 2: 183)
இறைவனுக்கு பயந்து, அவன் ஏவியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் பொறுப்புணர்வோடு நடப்பதுதான் இறையச்சமாகும். அதற்கு உரிய  பயிற்சியை நோன்பு கொடுக்கின்றது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளை கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
= யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (ஆதாரம்: நபிமொழி நூல் புகாரி)
= எத்தனையோ நோன்பாளிகள் தனது நோன்பிலிருந்து பசியைத்தான் உணர்கிறார்களே தவிர வேறு எதையும் உணர்வதில்லை. எத்தனையோ இரவு நேரங்களில் நின்று வணங்கும் தொழுகையாளிகள் கண்விழித்தைத்தவிர வேறு எதையும் உணர்வதில்லை.( அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரழி) நூல்: நஸயி, இப்னுமாஜா, ஹாகிம்.)
ரமலான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
நோன்பின் மாண்புகள்
= நோன்பு பரிந்து பேசும்: நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாகஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
= நோன்பை போன்ற ஓர் நற்காரியம் இல்லை: நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லைஎன கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).
= கணக்கின்றி கூலி வழங்கப்படும்: ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
= நோன்பின் கூலி சுவர்க்கம்: நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
= நரகத்தை விட்டு பாதுகாப்பு: எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
= கேடயம்:  நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).
= முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்: எவர் ரமலான்மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
= மனோ இச்சைகளை கட்டுப்படுத்தும் : வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
= நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
= கஸ்தூரியை விட சிறந்த வாடை: எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி, முஸ்லிம்).

வெள்ளி, 3 ஜூன், 2016

மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்!

Related image  ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம், நிறத்துக்கு நிறம், மொழிக்கு மொழி வேறுபாடுகளும் வேற்றுமை உணர்வுகளும் கொண்ட மனிதகுலத்தை ஒருங்கிணைக்க ஒரு வழி இருக்குமானால் அது இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருக்கும். அவ்வழி  தனிநபர் ஒழுக்கத்தையும் சமூக ஒற்றுமைக்கான அடிப்படைகளையும் மேம்படுத்துவதாகவும் அமைந்து விட்டால் உலகமே அமைதிப் பூங்காவாக மாறாதா? 
இஸ்லாம் என்ற இறைமார்க்கம் அதில் இணைந்தவர்களுக்கு  விதிக்கும் ஒவ்வொரு கடமைகளிலும் இந்த மனிதகுல ஒருங்கிணைப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை ஆராய்வோர் அறியலாம். இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் (discipline) என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல் விலக்கலகளை ஏற்று அதன்படி வாழும்போது பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம்! இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள். அதைப் போலவே ஒவ்வொரு ரமலான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.
= ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறாரோ அவருக்கு நோன்பு திறப்பவரின் கூலி கிடைக்கிறது. இதன் மூலம் நோன்பாளியின் கூலியில் எந்தவித குறையும் ஏற்படுவதில்லை". (ஆதாரம்:அஹ்மத்)
இந்த நபிமொழிகள் ஐவேளைத் தொழுகைகளை கூட்டாகத் தொழுவதையும் சக நோன்பாளி நோன்பு திறப்பதற்காக உணவளிப்பதையும் வலியுறுத்துவதால் ரமலான் மாதத்தில் அதிகம் நன்மைகளையும் இறைப் பொருத்தத்தையும் நாடி விசுவாசிகள் இவற்றில் கூடுதல் ஊக்கத்தோடு ஈடுபடுவதை நீங்கள் காணலாம்.
கண்கொள்ளாக் காட்சிகள்
- உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகை நேரங்களில் இறைவிசுவாசிகள் இன, நிற, மொழி மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மறந்து தொழுகைக்காக வரிசைகளில் அணிவகுப்பதும் 
- கடுங்குளிரிலும் அதிகாலை வேளைக்கு முன்னதாகவே எழுந்து உணவருந்திவிட்டு சூரியன் உதிக்கும் முன்னரே அதேபோல் தொழுகைகளில் அணிவகுப்பதும்
- மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பள்ளிவாசல்களில் ஒன்று கூடி அவரவர் கொண்டுவந்த உணவுப்பொருட்களையும் பழங்களையும் ஓரிடத்தில் குவித்து, பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் நோன்புக்கஞ்சியுடன் சேர்த்துப் பரிமாறப்பட  நீண்ட சமபந்திகளில் அமர்ந்து சக விசுவாசிகளோடு பகிர்ந்துண்பதற்காக காத்திருப்பதும்
- சூரியன் மறைந்த உடன் இறைவனை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகள் கூறப்பட ஒரே நேரத்தில் சகவிசுவாசிகளோடு பேரீத்தம்பழம் கொண்டு நோன்பைத் திறப்பதும்
- உணவுண்ட பின் மீண்டும் மாலைத் தொழுகைக்காக அணிவகுப்பதும் அதைத் தொடர்ந்து இரவுத் தொழுகைக்காக அணிவகுப்பதும்....
ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்! மனிதகுலம் சகோதர பாசத்தோடு ஒன்றிணைந்து தங்கள் வேற்றுமைகள் மறந்து தீண்டாமை மறந்து தோளோடுதோள் சேர்ந்து நின்று தொழும் காட்சியும் ஒரே தட்டில் பகிர்ந்துண்ணும்  காட்சியும் அதைக் காண்பவர்களுக்கே குதூகலம் அளிக்கும் ஒன்று என்றால் அதை அனுபவிக்கும் அங்கத்தினர்களின் உள்ளங்களில் எழும் மகிழ்ச்சியை எழுத்தில் எவ்வாறு வடிக்க இயலும்?
குடும்பங்களில் குதூகலம்
இல்லங்களில் பெரியோர்களைப் பார்த்து ஐந்து வயதுக் குழந்தைகளும் கூட  நோன்பு வைக்க ஆசைப்படுவதும், பெற்றோர்களின் தடையையும் மீறி அவை உணவைத் தவிர்ப்பதும், ஆசையாக அவர்கள் உண்ணும் பொருட்களை கையில் பிடித்தபடியே நோன்பு துறக்கும் வேளை வரைப் பொறுமை காத்து பிறகு உண்பதும் இல்லங்களில் நாம் காணும் காட்சிகள்!
விடியற்காலை நோன்பைத் துவங்கும்போது உண்ணும் உணவுக்காக பெரியவர்களை எழுப்பும்போது குழந்தைகளை எழுப்பாமல் போனால் காலையில் அவர்கள் செய்யும் களேபரங்களைப் பார்க்கத்தான் வேண்டும்!
 உலகம் பசியை தணிப்பதற்காகவே இயங்கி வருவதை நாம் அறிவோம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!என்பது பழமொழி. பசியின் முற்றிய நிலையில் மனிதனின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதையே இப்பழமொழி நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒரு பத்து பேரை மதிய உணவுக்காக விருந்துக்கு அழைத்து இரண்டு மணிநேரம் காத்திருக்க வைத்துப் பாருங்கள்... பசியின் கொடுமையான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்!
 குழந்தைகள் முதல் பெரியோர் வரை  உலக மக்கள்தொகையில்  கால்வாசிக்கும் அதிகமான மக்களை எவ்வளவு சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக ரமலான் வார்த்தேடுக்கிறது பாருங்கள். அவர்களைப் பகல் முழுக்க பட்டினி போட்டு அதே வேளையில் அவர்களுக்குக் கையெட்டும் தூரத்தில் உணவுக் குவியலையும் வைத்துவிட்டு மாலைவரை பொறுமை காத்து வருமாறு கட்டளையிட்டு அதே வேளையில் இயல்பு வாழ்க்கை வாழவைக்கும் இறைவனின் இந்த பயிற்சிக்கு இணையான ஒன்றை நாம் வேறெங்கும் காண முடியுமா?
 உலகெங்கும் பரவிக்கிடக்கும் தன் அடியார்கள் அனைவருக்கும் பகலில் பசி என்ற சீருடை அணிவித்து மாலையில் அவர்கள் சகோதர பாசத்தோடு பசியாறும் அழகைக் கண்டு ரசிப்பதில் இறைவனுக்கு அலாதி இன்பமோ?
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ (புஹாரி, முஸ்லிம்).


வியாழன், 2 ஜூன், 2016

படைத்தவனுக்கு மனிதன் பரிந்துரைக்க முடியுமா?

ஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
2:164  .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்;  இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்;  வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” 

அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது  செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு  விதிக்கப்பட்ட  தவணையில்  வந்து போகிறோம். இங்கு  இறைவனின் கட்டளைகளுக்குக்  கீழ்படிந்து  செய்யப் படும்  செயல்கள்  நன்மைகளாகவும் கீழ்படியாமல்  மாறாகச்  செய்யப்படும்  செயல்கள்  தீமைகளாகவும்  பதிவாகின்றன. இவ்வாறு  ஒவ்வொருவருக்கும்  நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும்  வாய்ப்பும் அளிக்கப்படும்  இடமே  இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
   
இந்தப் பரீட்சைக் கூடத்தின் இயல்புகள் 
கீழ்கண்டவை இந்த உலகம் என்ற பரீட்சைக் கூடத்தின் இயல்புகள் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்:
= இங்கு நேரான பாதையை மக்களுக்குக் காட்டித்தர இறைவன் தனது தூதர்களையும் தன் வேதங்களையும் அனுப்புகிறான். அதே நேரத்தில் இது ஒரு பரீட்சை என்ற காரணத்தால் இதில் ஷைத்தான் என்ற ஒரு கெட்ட சக்திக்கும் நம்மோடு வாழ அனுமதி வழங்கியுள்ளான்.
= இங்கு இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே நன்மை அல்லது புண்ணியம் ஆகும். எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே தீமை அல்லது பாவம் ஆகும். அவற்றை இறைவனின் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிகிறோம்.
= இங்கு நல்லவையும் தீயவையும்  நியாயமும் அநியாயமும் செல்வமும் வறுமையும்  நம் முன் மாறிமாறி வரும்.  நல்லோர்களுக்குத் துன்பமும் கஷ்டமும் தீயோர்களுக்கு  இன்பமும் மகிழ்ச்சியும் கிடைப்பதெல்லாம்  இங்கு சகஜம். அவ்வாறு நன்மை செய்வதற்கும் தீமை செய்வதற்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் இடமே இவ்வுலகம்.
 = மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன்  2:155)
= யார் எவ்வாறு வேண்டுமானாலும் எதைக்கொண்டு வேண்டுமானாலும் பரீட்சிக்கப்படலாம். அவற்றின் நியாயம் அநியாயம் என்பது நமது சிற்றறிவுக்கு எட்ட வேண்டும் என்பது இல்லை. நீர்க்குமிழிகள் போல் வாழ்ந்து மறையும் மனிதர்களின் தீர்ப்புக்காக இறைவன் காத்திருக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.
= இந்த பரீட்சையை எவ்வளவு பக்குவமாக நடத்துவது என்பதை மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவுநுணுக்கமும் அளவிலா ஆற்றலும் நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களின் பக்குவமான அமைப்பிலும் அவற்றின் குறையற்ற இயக்கத்திலும் அது பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அற்பஜீவிகளான நம்முடைய சிற்றறிவுக்கு அறவே புலப்பட வாய்ப்பில்லை.
= அவன் எதுவரை அனுமதிக்கிறானோ மற்றும் எவற்றை நமக்கு அறிவித்துத் தருகிறானோ அவை மட்டுமே நமது அற்ப அறிவு என்பது. அதை வைத்துக்கொண்டு அந்த இறைவனின் அறிவையும் ஆற்றலையும் எடைபோடுவதும் அவனது திட்டத்தில் குறைகாண்பதும் மனிதனின் அறியாமையின் வெளிப்பாடே! மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட அற்பமான தவணையில் தோன்றி மறையும் அற்பத்திலும் அற்பமான மனிதன்  ஆதியும் அந்தமும் இல்லாதவனும் அளவிலா அறிவும் ஆற்றலும் கொண்டவனும் ஆன இறைவனுக்கு அவன் ஏற்பாட்டுக்கு மாற்று ஒன்றைப் பரிந்துரைப்பது அகங்காரத்தின் உச்சகட்டம் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு இறைவன்பால் திரும்பி அவனிடம் மனிதனின் செயல்பாடுகள் குறித்து விசாரணை உள்ளது. அன்று வருத்தப்படுவது மனிதனுக்கு பயனளிக்காது.
“ஆண்டுகளின் எண்ணிக்கையால் நீங்கள் எவ்வளவு காலம் பூமியில் தங்கினீர்கள்?” என்று அவன் (இறைவன்) கேட்பான். அதற்கவர்கள் “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியே தங்கியிருப்போம்” என்பார்கள்.” (அல்குர்ஆன் 23: 112,113) 

செவ்வாய், 31 மே, 2016

திருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்

திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவனது தூதர் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பிய அறிவுரைகளின் தொகுப்பாகும். இந்தக் குர்ஆனில் இறைவன் அவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அவனது வாழ்வின் நோக்கம், மனிதனுடைய வாழ்வில் அவன் கடந்து செல்ல இருக்கின்ற கட்டங்கள் இறுதி விசாரணை, மறுமை வாழ்க்கை, சொர்க்கம், நரகம் என  மனிதனுக்கு தொடர்புடைய விடயங்களை இறைவன் நாடிய விதத்தில் தனது தூதர் மூலமாகத் தெரிவித்துள்ளான். மனிதர்கள் இயற்றிய மற்ற புத்தகங்களோடு ஒப்பிடும்போது திருக்குர்ஆன் ஒரு தனித் தரத்தில் இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் இதை இயற்றியவனுக்கும் வாசகர்களுக்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடாகும்.
ஆசிரியரின் தன்மைகள்
திருக்குர்ஆனை இயற்றியவன் எப்படிப்பட்டவன்? திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் பல்வேறு இடங்களில் இறைவன் தன் தன்மைகளைக் குறிப்பிடுகிறான். உதாரணமாகக் கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள்:
= 2:255. அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
= 3:6. . அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
வாசகர்களின் உண்மை நிலையும் அறிவும்
திருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய  நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:
= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே.
= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை.
= மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
= நமது அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை.

அறிவியலின் உண்மை நிலை
= இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் அறிவியலின் சக்திவாய்ந்த உபகரணங்கள் ஒரு  எல்லைவரைதான்  சென்றடைய சக்தியுள்ளவை என்பதை அறிவோம். அவற்றிற்கு அப்பால் உள்ளவற்றை ஓரளவுக்குத்தான் பகுத்தறிய முடியுமே தவிர முழுமையாக  அறிவேன் என்ற வாதத்தை எந்த மனிதரும் முன்வைக்க முடியாது. அதே போல இவ்வுலகத்தில் அனைத்தையும் முழுமையாக அறிவோம் என்று எந்த மனிதர்களும் அல்லது மனிதர்களின் குழுக்களும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் கூறமுடியாது. அவ்வாறு யாராவது கூறினால் மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அது பொய் என்பதும் அறியாமையின் வெளிப்பாடு என்பதும் தெளிவு! நாம் பெறும் அறிவின் வரையறை குறித்து மேலே எடுத்தாளப்பட்டுள்ள திருக்குர்ஆன் (2:255) வசனத்தில் இறைவன் கூறுவதைக் காணலாம்:
“....(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது;....”  

= அறிவியல் அவ்வாறு தன் எல்லைக்கு உட்படாதவற்றை அறியாதது என்று ஒப்புக்கொண்டு அவற்றை கரும் சக்தி (black /dark energy என்றும் கரும் பொருள் (black /dark matter) என்றும் பெயரிட்டு அழைக்கிறது. அறிவியலின் ஆராய்ச்சி எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் சுமார் 96 % இடத்தை கரும்சக்தியும் (74%) கரும்பொருளும் (22%) தக்க வைத்துள்ளன. ஏனைய பொருட்களைப் பார்த்தால் அண்டங்களுக்கு இடையேயுள்ள வாயுப் படலம் 3.6% வீதத்தையும் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி வீசிடும் பொருட்களும் நட்சத்திரங்களும் 0.4% வீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளன.
ஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர் யுஷிதி கூஷன் (Yushidi Kusan) அவர்களின் கூற்று இங்கு கவனத்திற்குரியதே:
குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும் என்று கருதுகிறேன்.
ஆக, நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது என்பதை நேர்மையான பகுத்தறிவாளர்கள் உணர்வார்கள். அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம். திருக்குர்ஆன் அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுவது அந்த இறைவனைத்தான்.

 எனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனைக் கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். இந்த உண்மைகளைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தனது பலவீனத்தையும்  அற்பநிலையையும் உணராமல் தன்னைத்தானே உயர்வாகக் கருதுவோரை அகங்காரமே ஆட்கொள்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் திருக்குர்ஆனை அணுகும்போது அந்த இறை அருட்கொடையில் இருந்து பயன்பெறுவதில்லை. படைத்தவனின் வழிகாட்டுதலை மறுப்பதால் இவர்கள் வாழ்க்கை என்ற பரீட்சையில் வெற்றி பெறுவதில்லை!
= அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6: 21)

= எவன் அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகி விடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்?  நம்முடைய வசனங்களை விட்டு விலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.” [திருக்குர்ஆன் 6:157]
==================== 

அற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும் http://quranmalar.blogspot.com/2012/09/100.html