இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 செப்டம்பர், 2014

வாழ்க்கைத் துணை தேர்வு

Thai flower garland for Thai wedding ceremony Stock Photo - 17533414
ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கைத் துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது.. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் எத்தனையோ அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்றாலும் பருவ வயதையடைந்தவர்கள் வெறும் புறக்கவர்ச்சியில் மயங்கி எதிர்கால மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகின்றனர். சமூகத்தின் சீரழிவுக்கும் காரணமாகின்றனர்.
    மோகமும் காமமும் முற்றியிருக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணையின் கோபமும் கூட கவர்ச்சிகரமானதாகத் தோற்றமளிக்கும். சில மாதங்களில் எதார்த்த நிலைக்கு வந்த பிறகுதான் எத்தனையோ விஷயங்களை கவனிக்கத் தவறிவிட்டோம் என்ற உண்மை உறைக்கும். வாழ்க்கை முழுவதும் நரகமாகி விட்டதை அப்போது தான் உணர்வார்கள். இவ்வாறு மகிழ்ச்சியைத் தொலைத்த பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.
    குறிப்பாக இளம்பெண்கள் இத்தகைய இனக்கவர்ச்சிக்கு வசப்பட்டுவிட்டால் ஆண்களால் ஏமாற்றப்பட்டு கர்பிணிகளாக்கப்பட்டு கைவிடப்படுகின்றனர். சிலவேளை சிவப்பு விளக்குப் பகுதியில் கூட விற்கப்படுகின்றனர்.
   இந்த இனக்கவர்ச்சியில் மயங்காமல் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி? இதை வென்றெடுக்கும் வழி என்ன?
இதற்குத்தான் தெளிவான முறையில் இறைவன் தனது திருமறை மூலமும் திருத்தூதர்  மூலமும் வழிகாட்டுகிறான். இறைநம்பிக்கையை முக்கிய  அளவுகோலாகக் கூறுகிறான் இறைவன். 
    'இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணை - அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்! இறைநம்பிக்கையுடைய அடிமைப் பெண் (அடிமையல்லாத) இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவள். அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
    உங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை - மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
    (இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்'. (அல்குர்ஆன் 2:221)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டான், விபச்சாரி விபச்சாரணையோ அல்லது இணைவைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு எவரையும்) திருமணம் செய்ய மாட்டாள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.'  (அல்குர்ஆன் 24:3)
= நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
."நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1.
அவளது செல்வத்திற்காக
2.
அவளது குடும்பத்திற்காக
3.
அவளது அழகிற்காக
4.
அவளது மார்க்கத்திற்காக
மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள்.''
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: புகாரி 5090)
மார்க்கம் என்றால் இறைவனின் கட்டளைகளைப் பேணி வாழும் பண்பைக் குறிக்கும்.
    இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்ற எண்ணம்தான் எப்படியாவது இந்த உலகத்தை அனுபவித்து விடத் தூண்டுகிறது. சிந்தனைக்குத் திரை போடுகிறது. இந்த உலக வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரும். ஒரு கட்டத்தில் இந்த உலகம் அழியும். அழிந்த பின் அனைவரும் இறைவன் முன்பாக நிறுத்தப்படுவோம். அவரவர் செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் சொர்க்கமோ நரகமோ பெறுவார்கள் என்பதை யார் உறுதியுடன் நம்புகிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த இனக்கவர்ச்சியை வெல்ல முடியும்.
    இந்த நம்பிக்கையையூட்டி நமது சந்ததிகளை வளர்ப்பதால் மட்டுமே இன்று மக்கள் அனுபவித்துவரும் விபரீதங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

‘மனிதன் யாரை நேசிக்கிறானோ அவனுடன் தான் மறுமையில் இருப்பான்’  என்பது நபிமொழி. எனவே தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் இறைவழிகட்டுதலை ஏற்று செயல்பட்டால் இவ்வுலகில் இல்லறத்தில் ஏற்படும் குழப்பங்களில் இருந்து பாதுகாப்பும் பெறலாம் மறுமையில் மோட்சத்தையும் அடையலாம்.
------------------ 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

பெண்குழந்தைகளைக் காப்போம்


குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ என்றும் தன் ஆடம்பரம் மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்று தரம்தாழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். அதன் விளைவாக தன் சுயநலம் மற்றும் பொறுப்பின்மை மேலிட தான் பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான். எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற அற்ற செயல் அது! அச்செயலை  குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதித்தது.
 நாட்டு வளங்களை முறைப்படி கையாளத்  திறமையில்லாத சுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்தனர்.
அழகிய சொல்லாடல்களைக் கையாண்டனர். நாளும் பொழுதும் ஊடகங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்தனர். “நாமிருவர் நமக்கு மூவர்’’ என்று தொடங்கி மூவர் இருவராகி இறுதியில் “நாமிருவர் நமக்கு ஒருவர்” என்று சுருக்கினர். இன்னும் சில சமூகப் பொறுப்பில்லாத கயவர்கள் “நாமே இருவர், நமக்கு ஏன் இன்னொருவர்?” என்று சிந்திக்கவும் செயல்படுத்தவும் செய்தனர். அப்படி இருக்கும்போது அந்த ஒருவர் பெண்ணாய் வந்துவிட்டால் என்ன நடக்கும்? அனைவருக்கும் தெரிந்ததே! ஆம், பெண் இனம் பல்வேறு விதமாக கொன்றொழிக்கப்பட்டது. பிறக்கும் முன்பே  மருத்துவ மனைகளில் அவளைக் கொன்றார்கள், தப்பித் தவறி பிறந்துவிட்டால் கள்ளிப் பாலும் அரிசிமணிகளும் அவளைப் பதம் பார்த்தன!  இவ்வாறு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த கூட்டக் கொலைகள் நாடு எங்கும் நிறைவேறின. இன்னும் நிறைவேறிக் கொண்டுவருகின்றன. நாட்டில் வனவிலங்குகளும் கால்நடைகளும் அழிவது கண்டு முதலைக்கண்ணீர் வடித்த “மனிதாபிமானிகளுக்கு’ தன் இனம் அழிவது கண்டு அழுகை வரவில்லை! என்ன ஆச்சரியம்!
சமூகத்தில் மனித உணர்வுகளை, ஆசாபாசங்களை, பாச நேசங்களை சமநிலைப்படுத்த  இறைவன் வழங்கிய பெண்மை என்ற ஒரு மாபெரும் பொக்கிஷத்தை அறியாமையின் காரணமாக தொலைத்துகொண்டு நிற்கிறது மனித இனம்!
அண்மைக்கால யூனிசெஃப் அறிக்கையின்படி இந்திய நாட்டில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் தொடர்ந்த பெண்பால் வேற்றுமையுணர்வு காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் ஏறத்தாழ 100 ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 105 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 93க்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2000 பெண் சிசுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றன.
பெண்ணுரிமைவாதிகள் எங்கே?
பெண்களை ஒருபுறம் கொன்றோதுக்கி விட்டு  மறுபுறம் பெண்ணுக்கு உரிமை வேண்டுமாம்! அவளுக்கு இவ்வுலகில் நுழைவதற்கே தடை விதித்துவிட்டு வாய்கிழிய முழக்கமிடும் பெண்ணுரிமைவாதிகளும் மாதர் சங்கங்களும் யாருக்காகப் போராடுகிறார்கள்? தொடரும் இக்கொடுமைக்கு எதிராக அவர்களின் குரல்கள் மௌனமாகும் மர்மம என்ன? பெண்ணின் முதல் உரிமை அவளுக்கு பிறக்கும் உரிமை! இதைப் பாதுகாக்க என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறார்கள் அவர்கள்?
இறைநம்பிக்கையாளர்களின் கடமை:
யார் எப்படி செயல்பட்டாலும் சரி, செயல்படாவிடினும் சரி, இறைவனை நம்பி அவனுக்கு அடிபணிந்து வாழ தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நன்மக்கள் இத்தீமை இனியும் சமூகத்தில் பரவாமல் தடுக்க ஆவன செய்யவேண்டும். இன்று வாழ்வோரையும் இனி வரும் தலைமுறகளையும் இக்கொடுமையின் ஆபத்து பற்றி உரிய முறையில் எச்சரிப்பது நமது கடமை.
உலகை சீரமைப்போம் வாரீர்!
இது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன. அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் அடிப்படையாக உணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.
= கண்ணுக்குத் தெரியும் உயிராயினும் தெரியாத உயிராயினும் சரி பெரிதாயினும் சிறிதாயினும் அவற்றை அநியாயமாக நோவினை செய்தாலோ அல்லது கொன்றாலோ அது இறைவனிடம் பாவமே! மறுமை நாளில் அதற்கான விசாரணை உண்டு. அந்த வகையில் சிசுக்கொலைகளுக்கும் தண்டனை உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்
17:31  .நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
இன்று பெண்குழந்தைகள் என்றால் ஸ்கேன் செய்து பார்த்து கொல்லும் பெற்றோர்கள் நாளை மறுமை நாளில் தண்டனைக்குள்ளாவார்கள். அவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே அவர்கள் செய்த குற்றத்திற்கு சாட்சியாக நிற்பார்கள்
81:7-9 .உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?'' என்று-
இறைவன் கற்பிக்கும் வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவோரிடம் இத்தீமை நடைபெறுவதில்லை! இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் வகுத்து வழங்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம் என்று அரபி மொழியில் அறியப்படுகிறது. பெண் சிசுக்கொலையை மட்டுமல்ல, அதற்கு இட்டுச்செல்லும் அனைத்து விடயங்களையும் உரியமுறையில் தடை செய்கிறது இஸ்லாம். பெண்சிசுக்கொலைகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் வரதட்சணை. திருமணத்தின்போது  வரதட்சணைக்கு நேர் எதிராக மஹர் என்னும் மணக்கொடையை மணமகன் மணமகளுக்கு வழங்குவதை கட்டாய கடமை ஆக்கியுள்ளது இஸ்லாம். பெண் என்பவள் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம், அவளை அடைய வேண்டுமானால் அதற்காக ஆண் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, திருமணத்தின் மூலம் உண்டாகும் அனைத்து செலவினங்களையும் குடும்பத்தின் பராமரிப்பையும் ஏற்பதை ஆணின்மீது சுமத்துகிறது. பெண்ணுக்கு ஆணுக்கு சமமான உரிமைகளை வழங்கும் அதேவேளையில் அவளை காட்சிப் பொருளாக்கியும் கடைசரக்காக்கியும் இளமையிலேயே அவளது கற்ப்பை சூறையாட நினைக்கும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க உரிய உடை ஒழுக்கத்தையும் ஆண் பெண் உறவு வரம்புகளையும் கற்ப்பிக்கிறது. இவ்வாறு பெண்ணைப் பெற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையை நீக்கி அவர்களைப் பெருமை மிக்கவர்களாக சமூகத்தில் உயர்த்துகிறது இஸ்லாம்!  
இறைவிசுவாசிகளே வாருங்கள், நாத்திகர்களை நம்பி உங்கள் இனங்களை நீங்களே அழித்து விடாதீர்கள். இறைவனின் வாக்குகளை நம்புங்கள். குழந்தைகளை அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை அரிய பொக்கிஷமாக கருதி போற்றி வளருங்கள். இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 "ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு இறைவன்  வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: "வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும். இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்" அறிவிப்பாளர்:  நபித்இப்னு ஷுரைத் (ரலி)  ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர் 243
எவருக்கு பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டதுஎன்றார் நபிகளார் (ஆதாரம்:அஹ்மத்)

பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கத்திற்கு செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்!

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன?

இல்வாழ்க்கை இனிதாக அடிப்படை தேவை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 
என்கிறது வள்ளுவனின் குறள்.
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.’ என்று இதற்கு விளக்கமளித்து இருக்கிறார் சாலமன் பாப்பையா
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார் கலைஞர்.
  செய்யுள்களிலும் கவிதைகளிலும் வர்ணிக்கப்படும் இல்வாழ்க்கை உண்மையில் அவ்வாறு பண்போடும் பயனோடும் அமைய வேண்டுமானால் அதற்கு முறையான இறையச்சமும் மறுமைக் நம்பிக்கையும் அங்கு கற்பிக்கப்பட வேண்டும். நாத்திகமும் முரண்பாடான தெளிவில்லாத கடவுள் கொள்கைகளும் அதற்கு அறவே உதவாது என்பது தெளிவு..
முறையான இறையச்சமும் மறுமை நம்பிக்கையும்  
மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது என்னைப்  படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வருவதன் விளைவாக  மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது. 
 நபியே நீர் கூறுவீராக! இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
இவ்வாறு இறைவனின் தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை  இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப் பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அந்த நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு இறைவன் விதிக்கும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.
இந்த அடிப்படையை அனைவரும் பேணி வாழ்ந்தால் அங்கு ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு போன்றவற்றால் குடும்ப உறவுகள் செழிக்கும்.

அவ்வாறு அமைய வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளை கைகொள்ளவேண்டும். அதற்கு மேற்கண்ட என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில் நிலைநாட்டி இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே மக்களுக்குக் கற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும். அப்போதுதான் அங்கு பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும் மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகமும் உருவாகும். பூமியே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை. 

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

இறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்


இறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னுதாரண வாழ்க்கையில் இருந்தும் பெறப்படுபவையே இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள். இவற்றை பேணுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அரபுநாட்டில் நபிகளாரின் காலத்தில் நடைமுறைக்கு வந்த இந்த வாழ்வியல் சட்டங்கள் அன்று எவ்வாறு பெண்களை கொடுமைகளில் இருந்து விடுவித்ததோ அதே போல பிற்காலங்களில் எங்கல்லாம் இஸ்லாம் பரவியதோ அங்கெல்லாம் பெண்களை அவர்களின் மூதாதையர்களின் மூடப்பழக்க வழக்கங்கள் உண்டாக்கி வைத்த கொடுமைகளில் இருந்து விடுவித்தது, தொடர்ந்து விடுவித்துக் கொண்டு வருகிறது என்பதை நடைமுறையில் காணலாம்.
= பிறப்புரிமை:
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் முதல் உரிமை பிறப்பதற்கான உரிமை. பெண் குழந்தை என்றால் இழிவு எனக் கருதி அவர்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அங்கு அராபியர்களிடம் இருந்து வந்தது. குழந்தைகளை கொலை செய்வதை குறிப்பாக பெண்குழந்தைகளை கொல்வதை கடுமையாக எச்சரித்து தடுத்தது.  அதனை மறுமை வாழ்வுடன் தொடர்புபடுத்தி அச்சமூட்டுகிறான் இறைவன்:
 'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)
= கற்கும் உரிமை:
கல்வி கற்பதற்கான உரிமையை வழங்குவதோடு நின்றுவிடாமல் அதை கடமையாக்கியது இஸ்லாம். “அறிவைத் தேடுவது ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமாகும்” என்று அறிவித்து நடைமுறைப் படுத்தினார் நபிகள் நாயகம்(ஸல்). அன்னாரின் துணைவியார் ஆயிஷா அம்மையார் மாபெரும் மார்க்க மேதையாக திகழ்ந்தார் என்பதை நபிமொழி பதிவுகள் சான்று கூறுகின்றன.
 
=   மானிட சமன்பாடு :
பெண்கள் மனித இனமா, பெண்களுக்கு ஆன்மா உண்டா என்றெல்லாம்  பிற சமூகங்களில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஆண்களும் பெண்களும் சமமே, அவர்கள் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றியோர் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இந்த இழிவுக்கு முடிவு கட்டியது இஸ்லாம். அவர்களோடு உள்ள சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்தி இறுதிநாள் வரை பின்பற்ற அடித்தளமிட்டது இஸ்லாம்.
 'மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனை பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்'. (திருக்குர்ஆன் 4:1)

= ஆன்மீக அந்தஸ்து:
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஆன்மீகத்தில் சம அந்தஸ்த்தையும்  உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. நன்மையான செயல்களுக்கான கூலி இரு சாராருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.
33:35. நிச்சயமாக இறைவனுக்கு கீழ்படியும் ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
= பொருளாதார உரிமை:
பெண்களின் உயிர், கண்ணியம் சொத்து ஆகியவற்றிற்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப்படுகின்றன. சொத்துக்களை வைத்திருப்பதற்கு மாத்திரமன்றி, அவற்றை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 'இறந்து போன பெற்றேரோ, நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருட்களில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு' (திருக்குர்ஆன் 4:7)
= பொருளீட்டும் உரிமை:
ஆண்களைப்போன்றே பெண்களுக்கும் பொருளீட்டும் சமத்துவத்தை இஸ்லாம் முன்வைத்தது.
 'ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்வை உரியன. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன.(4:32)
=    ஆளுமைக்கு மதிப்பு:
ஒருவர் இறந்து போனதும் அவரது சொத்துக்களை வாரிசு சொத்துக்களாக பங்கிடுவது போல இறந்து போன மனிதரின் மனைவியரை பங்கிட்டுக்கொள்ளும் தீயபழக்கம் இஸ்லாம் வருவதற்கு முன் அரபு சமுகத்தில் காணப்பட்டது. மனிதாபிமானமற்ற இந்த பாரம்பரியத்தை இஸ்லாம் அழித்தொழித்து, பெண்ணின் ஆளுமைக்கு மதிப்பும், கண்ணியமும் வழங்கியது.
 'விசுவாசம் கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல' (4:19)

 
=    திருமண சீர்திருத்தம் :
இஸ்லாம் திருமணத்தை ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது.  இருமனம் இணையும் திருமண உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும், வரதட்சணைக்கு எதிராக மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. திருமணத்திற்கு பெண்ணின் சம்மதத்தை கட்டாயமாகியது.
- மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)
= ’கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்என்று கூறினார்கள்.  அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
 =    விவாகரத்து உரிமை:  
இஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் தான் விரும்பாத போது கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமையை வழங்குகிறது.
= சாட்சி கூறும் உரிமை:
பெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்தவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.
'... கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..'' 
                           - திருக்குர்ஆன் 2: 282
 =  கனிவோடு நடத்த கட்டளை:
பெண்களுடன் அன்பாகவும், கனிவுடனும் நடக்குமாறு இஸ்லாம் ஏவுகின்றது.
4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
 =    மானத்திற்கு பாதுகாப்பு:
பெண்களது மானத்திற்கான உரிமையையும் உத்தரவாதத்தினையும் இஸ்லாம் வழங்குகிறது.
 'எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டுவராவிட்டால், அவர்களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியவர்கள்'. (திருக்குர்ஆன் 24:4)
= ஹிஜாப் என்ற விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆடை ஒழுக்கம்..
பெண்ணை ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து விடுவிக்க இஸ்லாம் பரிந்துரைக்கும் விடயமே ஹிஜாப். அவளை கடைசரக்காகவும் காட்சிப்பொருளாகவும் ஆக்கி அவளது கற்ப்பை சூறையாடும் காமுகர்களிடம் இருந்து விடுவிக்கும் பாதுகாப்பு அரண்தான் இது. இஸ்லாம் வழங்கிய  உரிமைகளை பூர்த்தி செய்யும் முகமாக அவள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வையும் இன்ன பிற தீங்குகளில் இருந்தும் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து அவளது காரியங்களை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள வழிவகுப்பதே ஹிஜாப் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
     இவ்வாறு இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான சகல உரிமைகளும் அவர்கள் கேட்காமலே அதற்காக அவர்கள் போராடாமலேயே அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. உலகெங்கும் பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணுக்காக யாரும் பரிந்து கூட பேச முன்வராத காலத்தில் அவளது உரிமைகளை உணர்த்தியது. ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து விடுவித்தது.
இவற்றை எல்லாம் மீறிய இன்னொன்றையும் கவனியுங்கள்...
= எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையும் நம் கடமை!
 இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களின் உரிமையை மட்டுமல்ல  ... எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையையும் கூட பேண வலியுறுத்துகிறது இஸ்லாம்! போரில் எதிரி நாட்டோடு எப்படியும் அணுகலாம், அவர்களை எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம் என்ற எந்த வரம்பும் வரையறுக்கப்படாத காலகட்டத்தில் ‘இல்லை இல்லை இப்படித்தான் அணுகவேண்டும்’ என்று யுத்த தர்மங்களை அறிமுகப்படுத்தியது இஸ்லாம். அங்கு போரில் ஈடுபடாத பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
   
இது தொடர்பாக நபி (ஸல்) கூறும் போது, 'வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆகிய யாவரையும் கொல்லாதீர்கள்' (அபூதாவூத்)
        ஒரு  போரின்போது தரையில் ஒரு பெண்ணின் சடலம் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட நபியவர்கள் கூறினார்கள், 'இவள் போர் செய்யவில்லை. பின் ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்?' என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள்..

ஆம், எதிரிகளை வெல்வது அல்ல இஸ்லாத்தின் நோக்கம். மாறாக அவர்களை சீர்திருத்தி பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே. எனவே அவர்களுக்கு இறைவன் பூமியில் வழங்கிய உரிமைகளை அவர்கள் எதிரிகள் என்ற காரணத்துக்காக மீறுவதும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். இதுதான் இஸ்லாம்!
அனைவரையும் படைத்து பரிபாலித்துவரும் அளவற்ற அருளாளன் அருளிய மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html