இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 மே, 2014

கேரளாவும் தமிழ்நாடும் இணைய முடியுமா?

 இன்று நம் நாடு பல்வேறுவிதமான கற்பனை உருவங்களாலும் மாயைகளாலும் மூடநம்பிக்கைகளாலும் ஆளப்பட்டு அனைவரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த எல்லைக்கோடு என்பது. உதாரணமாக மேலே கூறப்பட்ட இரு மாநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் முல்லைப்பெரியார் நீர் பங்கீடு காரணமாக அவ்வப்போது நடைபெறும் கலவரங்களையும் அவற்றைத் தொடர்ந்து ஏற்படும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களையும் நாம் அனைவரும் அறிவோம்.
 இப்படிப்பட்ட தீராத பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? வேறு எதுவுமல்ல, எல்லைக்கோடு என்ற ஒரு கற்பனைக் கோடுதான்! தொலைநோக்கிகள் கொண்டும் நுண்ணோக்கிகள் கொண்டும் பூமியை ஆராய்ந்தாலும் அகப்படாத ஒன்று.இது. இன்று நவீன தொழில் நுட்பத்தின் உதவியால் செயற்கைக்கோள்களில் இருந்து பூமியை அங்குலம் அங்குலமாக படம்பிடித்து கணிணியில் ஆராய வழிவகை உள்ளது. எப்படி ஆராய்ந்தாலும் தட்டுப்படாத ஒன்று இது! காவிரி நீர் விஷயமாக தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த எல்லைக்கோடுதான். நிர்வாக வசதிக்காக எப்போதோ உருவாக்கப்பட்ட இவை இன்று பாமரர்களின் உயிர்குடிக்கும் காரணிகளாக மாறியுள்ளன.
கர்நாடகாவில் வாழும் மக்களும் சரி தமிழ்நாட்டில் வாழும் மக்களும் சரி கேரளாவில் வாழும் மக்களும் சரி.... அனைவரும் அடிப்படையில் மனிதர்களே. ஒரே மனித இனத்தைச் சார்ந்தவர்களே. ஒரே மாதிரியான உருவ அமைப்பு, உடல், இரத்தம், சதை என அனைத்தும் ஒன்று. உணவு, காற்று நீர் என்று அனைவரின் தேவைகளும் ஒன்று. அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் விதமும் ஒன்றே. இவ்வாறு இருக்கும்போது இவர்களைப் பிரித்து வைத்திருப்பது எது? ஒரே நீர் ஆறாக ஓடி ஒரு கற்பனையான கோட்டைக் கடக்கும்போது எப்படி பிரச்சினை உண்டாகிறது? ஒரு மாநிலத்துக்குள் அது ஓடும்போது இல்லாத பிரச்சினை எல்லைக் கோட்டைத் தாண்டி ஓடும்போது  எப்படி முளைக்கிறது?
இதைப் போலவே மனித உறவையும் சமூக அமைதியையும் இடைவிடாது  பாழ்படுத்திக் கொண்டிருக்கும் இன்னும் சில கற்பனைப் பொருட்களையும் உருவங்களையும் மாயைகளையும் மூடத்தனமான நம்பிக்கைகளையும் நாம் அடையாளம் கண்டு அவற்றைக் களைய ஆவன செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
மொழி என்பது ஒரு தகவல்தொடர்புக்கான சாதனம். அதனை நாம் அவ்வாறே புரிந்து கொள்ளவேண்டும். மாறாக இன்ன மொழி பேசும் ஊரில் அல்லது குடும்பத்தில் பிறந்தோம் என்பதற்காக மாற்றார்களை இழிவாகப் பார்க்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது. மட்டுமல்ல மொழியைக் கடவுளாக சித்தரிப்பதும் மொழியின் பெயரால் தமிழ்த்தாய் அல்லது கன்னடமாதே என்று கற்பனை உருவங்களும் சிலைகளும் செய்து அவற்றை வழிபடுவதும் வழிபடாதவர்களை மிரட்டுவதும் துன்புறுத்துவதும் எந்த வகையில் நியாயம்? சில கவிஞர்களும் ஓவியர்களும் எப்போதோ புனைந்த இந்த “மொழித்” தாய்கள் எங்கே வாழ்கிறார்கள்? யாராவது காட்ட முடியுமா? இன்ன இடத்தில் இன்ன மொழிதான் பேச வேண்டும். இல்லையேல் நீ அந்நியன், நீ இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றெல்லாம் கோஷமிடுவதும் அவ்வாறு பாமரர்களை அக்கிரமமாக வெளியேற்றுவதும் இன்று பரவலாகவும் சகஜமாகவும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த அக்கிரமங்களுக்கு பகடைக்காய்களாக அந்த கற்பனைத் ‘தாய்மார்கள்’ பயன்படுத்தப் படுகிறார்கள்.
இதைப் போலவே நம் நாட்டை வெகுவாக பாதித்து வரும் பெரிய தீமை ஜாதிப்பிரிவினை. யாரோ சிலர் இறைவனின் பெயரால் நம்முள் புகுத்திய சில மூடநம்பிக்கைகள் இன்றும் தொடர்ந்து நம்மில் சிலர் சிலரைத் தாக்கி அழிக்க எதுவாக உள்ளன. இவ்வுலகத்தைப் படைத்துப் பரிபாலிப்பவன் எவனோ அவன் மட்டுமே உண்மை இறைவன் என்பதை பகுத்தறிவு கொண்டு சிந்திப்போர் யாரும் ஐயமின்றி உணரலாம். ஆனால் நம் முன்னோர்களிடம்  சில இடைத்தரகர்கள் படைத்த இறைவனுக்கு பதிலாக பல்வேறுவிதமான படைப்பினங்களையும் உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களையும் எல்லாம் காட்டி அவற்றையெல்லாம் கடவுள் என்று கற்பித்தார்கள். நம் முன்னோர்கள் அவற்றை நம்பியதால் ஒவ்வொரு கடவுளர்களையும் வணங்கும் கூட்டாத்தார் ஒவ்வொரு ஜாதிகளாயினர். இந்த இடைத்தரகர்கள் அவற்றை உயர்ந்த ஜாதிகள் என்றும் தாழ்ந்த ஜாதிகள் என்றும் தாமாகத் தரம்பிரித்து அவற்றிற்கிடையே பாகுபாட்டை கற்பித்தனர். இதனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இறைவனை எளிமையாகவும் நேரடியாகவும் வணங்கிவந்த மக்களிடையே பாகுபாடும் பகைமை உணர்வுகளும் குலவெறியும் ஜாதிவெறியும் தோன்றின. முன்னோர்களின் வழிமுறைகள் என்று சொல்லி இவை இன்றும் தொடர்கின்றன.
இது கற்காலமல்ல! கல்லாமை ஒழிந்து மக்களிடையே அறிவு வளர்ச்சியும் அரசியல் விழிப்புணர்வும் பெருகிவரும் காலகட்டம் இது. பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் தீர்வுகளைத் தேடி ஆராயும் தலைமுறைகள் உருவாகி வரும் காலம் இது. முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக  நாமும் மேற்படி பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல் நியாயமா? மேற்கூறப்பட்ட கற்பனை வஸ்துக்களும் உருவங்களும் மடத்தனமான நம்பிக்கைகளும் நம்மை அழிவின் விளிம்பிற்க்குக் கொண்டு செல்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. இருந்தும் நம்மில் பெரும்பாலோரும் மௌனம் சாதிப்பது கொடுமையே!
ஆனால் இவ்வுலகின் அதிபதி இந்த மௌனத்தைப் பற்றியும் நாளை மறுமையில் விசாரிப்பான். எனவே நாம் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட தீமைகள் நம்மை பாதிக்காமல் இருக்க நம்மைப் படைத்த இறைவன் தன் திருமறை மூலமும் தனது தூதர் மூலமும் நமக்குப் பரிந்துரைக்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சமூகத்தைக் கட்டமைக்கப் பணிக்கிறான். அந்த வாழ்க்கைத் திட்டத்திற்குப் பெயர்தான் அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இத்திட்டம் முன்வைக்கும் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைத்தால் மனிதனை மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் நாடுகளிடையே ஒற்றுமையையும் நிலைநாட்டலாம்.
  1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு த் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு அவனை நேரடியாக வணங்க வேண்டும். இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் அளிக்கக் கூடாது. இறைவன் அல்லாத கற்பனை உருவங்களுக்கோ உயிரும் உணர்வும் அற்ற படங்களுக்கோ சிலைகளுக்கோ எந்த இறைத்தன்மையும் கிடையாது. அவற்றை வணங்குவதோ அவற்றுக்கு மரியாதை செய்வதோ பெரும் பாவமாகும்.
 அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்அவர்கள் சென்றடையும் இடம் நரகம்அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
3.  இறைவனின் நீதிவிசாரனையும் மறுமை வாழ்வும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது, இவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.
இந்த நம்பிக்கைகள் மனித மனங்களில் மெல்ல மெல்ல வேரூன்ற நாளடைவில் மொழி, நிறம், இடம் செல்வம் போன்ற எதுவும் மனித இனத்தைப் பிரிக்கமுடியாது. சமத்துவமும் சகோதரத்துவமும் தானாகவே சமூகத்தில் மலரும். உலக வளங்கள் சகோதர உணர்வோடும் இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையிலும்  பங்கிட்டுக்கொள்ள மக்களே முன்வருவார்கள். அதனால் ஏற்படும் இழப்புகளை இறைப்போருத்தத்திற்காக மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்! அவ்வாறு கர்நாடமும் தமிழகமும் மட்டுமல்ல. எல்லைக் கோடுகள் மறைந்து அகண்ட பாரதமும் உருவாகும்! நாடுகள் மறைந்து அனைத்து உலகும் ஒன்றாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனவு நனவாகும்!
இது ஒரு மாயையோ அல்லது வெற்றுக்கோஷமோ அல்ல. இந்த நம்பிக்கையின் துளிகளை நீங்கள் உலகெங்கும் காண்கிறீர்கள். ஆம், உலகெங்கும் இக்கொள்கை பரவப்பரவ அதன் தாக்கத்தினால் ஒருகாலத்தில் ஜாதி, நிறம் இடம் போன்றவற்றால் பிளவுண்டு கிடந்த சமூகங்கள் பள்ளிவாசல்களில் அணியணியாக அணிவகுப்பதிலும் ஒரே சீருடையில் ஹஜ்ஜின் போது சங்கமிப்பதிலும் காண்கிறீர்கள்   

திங்கள், 5 மே, 2014

திருக்குர்ஆன் இறங்கிய வரலாறு

முஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும்பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள்.அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.
ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர்மது குடித்தனர்மனித உயிர்களை துச்சமாக மதித்தனர்பெண்களை அடிமைகளாக நடத்தினர்சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர் நிறவெறிகோத்திரவெறிதேசியவாதம்சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது

 தன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க நபிகள் நாயகம் இந்த நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன? இவற்றின் முடிவு என்ன? நாம் ஏன் வாழ்கிறோம்? நாம் எங்கே போகிறோம்? .... என்பன பற்றியெல்லாம் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை நாடியவர்களாக மக்காவின் அருகே ஹிரா என்ற மலையில் ஒரு குகைக்குள் தனிமையில் தங்குகிறார்கள். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் ஜிப்ரீல் என்ற வானவர் அங்கு இறைவனிடமிருந்து வேத வசனங்களைத் தாங்கி வருகிறார்... 
ஆம் அன்றுதான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்! முதன் முதலாக இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்கள் இவையே: 
 (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (திருக்குர்ஆன் 96:1-5)
இவற்றைத் தொடர்ந்து வந்த இறைக் கட்டளைகளின் அடிப்படையில் நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்றுமக்களிடையே பிரகடனம் செய்தார்கள். இறைவன் புறத்திலிருந்து தான் பெறும் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். 
 ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின.  
முஹம்மது நபியவர்கள் 40-ஆவது வயதில் இறைத்தூதராக ஆனது முதல் 63-ஆவது வயதில் மரணமடையும் வரை அவருக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக ஒலிவடிவில் அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது.
திருக்குர்ஆன் பாதுகாக்கப்படும் விதம் 
 இறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக்  காட்டுவார்கள். நபிகளாரோ எழுதவோ படிக்கவோ அறியாதவர்.  தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு. தொடர்ந்து ஜிப்ரீலிடம் தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக் காட்டுவார்கள். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள். அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின.
இதைப் புரிந்துக்கொள்ள ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவோம். தமிழில் பழைய திரைப்படப் பாடல்கள் எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். பாலும் பழமும் கைகளிலேந்தி....... அல்லதுநான் ஆணையிட்டால்... போன்ற பாடல்களை நீங்கள் அறிவீர்கள். அவை இயற்றப்பட்டு வருடங்கள் நாற்பதுக்கு மேலாகியும் அவை இன்றும் அவ்வாறே பாடப்படுவதைக் காண்கிறோமல்லவாஒலிவடிவிலேயே அவை மக்களிடையே பிரபலாமானதுதான் அதற்குக்காரணம். அவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களும் முஸ்லிம்களிடையே பிரபலமாகின.
 புண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும்  பலரும் குர்ஆன் வசனங்களை  மனப்பாடம்   செய்தனர். குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ஓதப்படுவது என்பதே!
ஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது.
  உலகிலேயே மிக மிக அதிகமாக மூல மொழியில் ஓதப்பட்ட மற்றும் ஓதப்படும் நூல் திருக்குர்ஆன் மட்டுமே! குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள், (இன்ஷாஅல்லாஹ்)! இவ்வாறு முழு குர்ஆனும் ஒலி வடிவில் உலகெங்கும் உலா வருகிறது. மனித மனங்களிலேயே பாதுகாக்கவும் படுகிறது. இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம் (திருக்குர்ஆன் 15:9)
இப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன்,பைபிளபகவத்கீதைஉள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும்,மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே! காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா?
முந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை?

இப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தையும் ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானேஅவை ஏன் பாதுகாக்கப்படவில்லை?
அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா?அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.
மாறாக திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது?
இது இறைவனின் இறுதிவேதம். இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே மறுமை நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்

இஸ்லாம் எவ்வாறு அடிமைகளை விடுவித்தது?

படைத்த இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதலையே அரபு மொழியில் இஸ்லாம் என்கிறோம். அவ்வாறு கீழ்ப்படிந்து வாழ்பவர் யாராகினும் அவருக்கே முஸ்லிம் (அதாவது கீழ்படிபவர்) என்று கூறப்படும். ஏக இறைவனை மட்டும் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்று அவன் வழங்கும் வேதத்தையும் அவனது தூதரையும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டால் மனித வாழ்வில் மாபெரும் புரட்சிகள் ஏற்ப்படும். மனித சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் நிகழும். மனித உரிமைகள் மீட்டப்பட்டும், அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப் பட்டு மனிதன் சுதந்திரக் காற்றை சுவாசிப்பான். 
மட்டுமல்ல, மானிட சமத்துவத்தையும் அனுபவிப்பான்.

இஸ்லாம் மூன்று அடிப்படைகளை மனித மனங்களில் ஆழவிதைப்பதன் மூலம் சமூகத்தில் யாராலும் சாதிக்கமுடியாத புரட்சிகளை நிகழ்த்துகிறது. அவை இவையே;
1) ஒன்றே மனித குலம் 2) அனைவருக்கும் ஒருவன் மட்டுமே இறைவன் 3) அவனிடமே மீழுதல், அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இதன் மூலம் மனித சகோதரத்துவமும் சமத்துவமும் வளர்வதோடு மனித உறவுகளையும் உரிமைகளையும் பேணினால் இறைவன் மறுமையில் சொர்க்கம் கொண்டு பரிசளிப்பான் என்ற உணர்வால் மனிதன் ஊக்குவிக்கப் படுகிறான். அதற்காக தியாகங்கள் மேற்கொள்ளவும் துணிகிறான். 

மனித சமூகத்தில் அன்று புரையோடிப் போயிருந்த அடிமைத்தளையிலிருந்து மனிதனை எவ்வாறு மெல்லமெல்ல விடுவித்தது என்பதற்கு ஏராளமான சம்பவங்களை மனித வரலாறு பதிவு செய்துள்ளது. விரிவஞ்சி ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் மூலம் காண்போம்:

மஃரூர் என்பார் ஒரு நபித்தொழரைப் பற்றிக் கூறுகிறார் :
'
நான் நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்களை மதீனாவிற்கு அருகிலுள்ள 'ரபதாஎன்ற இடத்தில் சந்தித்தேன்அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறேஅவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன்நான் ஆச்சரியமுற்றவனாக அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறைஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன்அப்போது நபியவர்கள் கூறினார்கள்'அபூதர்அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரேநீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்.அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான்எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர்தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும்தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும்அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம்அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்என அபூதர் கூறினார்" .[ஆதாரம் : புஹாரி எண் 30 ]
 அதாவது ஏஜமானனையும் அடிமையையும் ஒரேவிதமான ஆடையில் அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. விசாரித்ததில் நபிகளாரின் கண்டிப்பும் உபதேசமுமே அதற்குக் காரணம் என்பதை அவர் அறிய வருகிறார். நபிகளாரின் உபதேசத்தில் கவனிக்க வேண்டிய உண்மைகள்:
= அடிமைகளும் இறைவனால் படைக்கப் பட்ட மனிதர்களே – அவர்கள் உங்கள் சகோதரர்களே!
= அந்த இறைவன்தான் அவர்களை உங்கள் ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவந்துள்ளான்.
= எனவே அந்த இறைவனின் பொருத்தம் உங்கள் மீது உண்டாக வேண்டுமானால் நீங்கள் அவர்களை உங்கள் சகோதரர்களாகவே பாவித்து நீங்க அனுபவிக்கும் சுகங்களை அவர்களும் அனுபவிக்கச் செய்யவேண்டும்.
= அவர்களுக்கு சிரமமான பணிகளைக் கொடுத்தால் கூடவே உதவவும் செய்ய வேண்டும்.
மேற்படி சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் இவ்வாறுதான் சரித்திரத்தில் பல புரட்சிகளைச் செய்து வந்தது. தொடர்ந்து செய்து வருகிறது! எங்கெல்லாம் இக்கொள்கை நுழைகிறதோ அங்கெல்லாம் மனித உரிமைகள் மறுமலர்ச்சி பெறுகின்றன. மானிட சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிலைநாட்டப் படுகின்றன.

வியாழன், 1 மே, 2014

சுற்றுலாக்களும் படிப்பினைகளும்



இயற்கை அழகை இரசிக்கவும் அவற்றில் அமைதியைக் காணவும்  கோடைவாசத் தலங்கள் நோக்கி நாம் பயணங்கள் மேற்கொள்ளும் காலம் இது!
மலையும் மடுவும் ஆறும் அருவிகளும் அவைகளின் சலசலப்பும்.....
மரங்களும் செடிகளும் கொடிகளும் தென்றலும் வசந்தமும்....
காய்களும் கனிகளும் மலர்களும் மொட்டுக்களும் மகரந்தமும்.....
அப்பப்பா... நிறத்தாலும் மணத்தாலும் சுவையாலும் எவ்வாறெல்லாம் நமக்கு இன்பமூட்டுகின்றன அவை! பசுமைக் கம்பளத்தின் மீது வண்ணங்களை வாரித்தெளித்த மலர்களும் நம் தலைக்கு மேலே குடைபிடிக்கும் வான்முகில்களும் ஆரத்தழுவும் தென்றலும்.....என்றுமே தொடரக் கூடாதா இவை? என்ற ஏக்கம் ஒவ்வொருவருக்கும் இருக்கவே செய்கிறது. இருப்பினும் வாழ்வின் உண்மைகளை நாம் மறக்கவோ அலட்சியம் செய்யவோ முடிவதில்லை. இவற்றை விட்டு விட்டு மீண்டும் பிழைப்புக்காக ஊர் திரும்பியாக வேண்டும்.
ஆனால் இந்த தற்காலிக இன்பங்கள் பின்னால் வர இருக்கின்ற ஒரு நிரந்தர இன்பங்கள் நிறைந்த ஒரு வாழ்விடத்தின் ஒரு சிறு மாதிரியே (sample) என்பதை சிந்திப்போர் உணரலாம். அதைப் பற்றி திருக்குர்ஆனில் நம்மைப் படைத்தவன் இவ்வாறு கூறுகிறான்:
29:58 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
அந்த வாழ்விடம் தற்காலிகமானது அல்ல. நிரந்தரமானது.
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
ஆனால் அங்கு செல்ல வேண்டுமானால் நாம் இறைவன் மீதும் அவன் தூதர்கள் மீதும் வேதங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிய வேண்டும். அவ்வாறு செய்வோரையே பயபக்தியுடையவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இறைவனின் செய்திகளைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக நடந்தவர்களைப் போல ஆக மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

இயற்கை அழகு இறைவனின் கைவண்ணமே!
இறைவனின் உள்ளமை பற்றியும் அவனது திட்டங்கள் பற்றிய பாடங்களைத் தாங்கி நிற்கின்றன இயற்க்கை காட்சிகள்:
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
16:12. இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக்கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:13. இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (இறைவனின் அருட்கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு அத்தாட்சியுள்ளது.
வரலாற்றுச்சுவடுகள்
சுற்றுலாக்களின் போது சரித்திரப்புகழ் வாய்ந்த பலவிதமான நினைவிடங்களையும் காண்கிறோம். நமக்கு முன்னர் இங்கு வாழ்ந்து சென்ற முன்னோர்களின் கைவண்ணங்களில் உருவான அவர்களின் மாளிகைகள், அரண்மனைகள், பாறைகளைக் குடைந்து அவர்கள் உண்டாக்கிய சிற்பங்கள், குகைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் என பலவற்றையும் நாம் காண்கிறோம்.
இவற்றில் இருந்து நாம் பெறும் பாடங்கள் என்ன?
நம்மில் பலரும் அவற்றில் கலை அழகு கண்டு வியக்கிறோம். அவர்கள் நம் நாட்டினர் என்பதற்காக பெருமை கொள்கிறோம். அதேவேளையில் நாம் சிந்திக்கவேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது...
அவர்களின் நிலை இப்போது என்ன? என்பதே அந்த சிந்தனை....
= அவர்கள் இப்பூமியில் தங்கள் வாழ்வு நிலையானது என்று எண்ணினார்கள். அதனால்தான் பாறைகளைக் குடைந்தும் தங்கள் வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இன்று அவற்றில் அவர்களைக் காணவில்லை!
= அவர்களில் சிலர் தங்கள் செல்வம் தங்களை நிலைத்திருக்க வைக்கும் என்று எண்ணினார்கள். அதனால்தான் நாட்டு செல்வங்களை அரண்மனைக்குள் சேமித்தார்கள். ஆனால் திரண்ட செல்வங்களை அனுபவிக்க அவர்களின் உடல்கள் இன்று இல்லை.
= தங்கள் புகழை நாடும் நாளைய தலைமுறையும் என்றென்றும் ஓத வேண்டும் என்று விரும்பியே கலைவண்ணம் மிக்க நினைவுச்சின்னங்களை சமைத்தார்கள். ஆனால் அதைக் காணவும் கேட்கவும் அவர்கள் இங்கு இல்லை.
= இறந்துபோன மனைவிக்கு பளிங்குக் கற்களால் மாளிகை கட்டி அழகுபார்த்தவர்களும் அவர்களில் உண்டு. அந்த மாளிகைகளின் அழகை ரசிப்பவர்கள் இன்று உண்டு. ஆனால் அவர்கள் இன்று இல்லை.
= தங்களைக் நீடூழி வாழவைக்கும் என்று தங்கள் இஷ்ட தெய்வங்களாகக் கருதியவற்றுக்கு சிற்பங்கள் வடித்தவர்களும் நம் முன்னோரில் உண்டு. அது பொய்க்கும் என்று அவர்கள் எண்ணிப்பார்க்கவே இல்லை.
ஆம் அன்பர்களே, இன்று சரித்திரங்களில் வைர வரிகளால் புகழப்படும் நமது முன்னோர்கள் தங்களுக்கு அப்படியொரு திடீர் முடிவுரை எழுதப்படும் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை! 
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
இந்த உண்மையையும் அவர்களில் பெரும்பாலோர் உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் நம்மை துக்கத்தில் ஆழ்த்துகிறது.
''பூமியில் நீங்கள் சுற்றி வந்து, இறை வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 6:11.)


புதன், 30 ஏப்ரல், 2014

திருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்!

திருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்!: 3:26. (நபியே!) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்...

திங்கள், 28 ஏப்ரல், 2014

நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு?

நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள்ரீதியான இழப்புகளில் இருந்தும்  நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.
நோய் ஏன் வருகிறது?
முதலில் நோய் ஏன் வருகிறது? பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும்! கண்களை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் மேலுள்ள குதிரைஒட்டி மெதுவாக கடிவாளம் கொண்டு இழுக்கும் போது அக்குதிரை நிதானத்தை அடைகிறது. அதுபோன்ற ஒரு செயலே நோய் என்பதும்!
மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை. தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான். அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை நிதானப் படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது! நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய்! அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்!
எனவே நோய் வரும்போது நாம் மிக மிக முக்கியமாக உணர வேண்டியவை :
படைத்தவனை உணர்வோம்
·  நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் கருணை மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்.
·  நாம் இதுவரை தங்கு தடையின்றி அனுபவித்து அருட்கொடைகளுக்கு நம் இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
·  அந்த ஒருவன் மட்டுமே நம் அனைவருக்கும் இறைவன். அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்க முடியும். அவன் எப்படிப்பட்டவன்?
திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
 (அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். இவ்வுலகைப் படத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறப்படும். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)
அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு முறையிட வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும். நமது குறைகளை நமது இறைவனிடம் முறையிட எந்த இடைத்தரகர்களையும் நாடக்கூடாது. அவனுக்கு இணையாக வேறு யாரையும் தெய்வங்கள் என்று கருதி வணங்கக்கூடாது. உயிரும் உணர்வும் அற்ற உருவங்களை நோக்கி கடவுளே என்று அழைத்து அவனை இழிவு படுத்தக் கூடாது.
30:40 'அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதாஅல்லாஹ் மிகவும் தூயவன்அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.'
திருக்குர்ஆனில் இறைவன் நமக்கு இவ்வாறு பிரார்த்திக்குமாறு கற்றுத்தருகிறான்.இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் (குர் ஆன் 1 : 4)
·  படைத்தவனை விட்டு விட்டு அவனது படைப்பிங்களை வணங்குவதோ அவைகளிடம் பிரார்த்திப்பதோ நமக்கு எந்த பயனையும் தராது. அது பாவமாகும். அதனால் நோயும் குணமாகாது மாறாக இறைவனது கோபத்தை அது தூண்டும். திருமறை மூலம் இறைவன் கற்றுத்தருவதைப் பாருங்கள்
;'அவனே என்னைப் படைத்தான்பின்னும்அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.அவனே எனக்கு உணவளிக்கின்றான்அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான். நான் நோயுற்ற கால்த்தில்அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.' (குர்ஆன் 26:78-81)
மேற்கண்டவற்றை உணர்ந்து நம்மைப் படைத்தவன்பால் திரும்பி  பாவ மன்னிப்பு கோர வேண்டும்.
அடுத்ததாக நாம் உணரவேண்டியது:
இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை
·  இவ்வுலக வாழ்க்கை என்பது தற்காலிகமானது. அழியக்கூடியது. இதை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாக ஏற்படுத்தியுள்ளான்.
67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்¢மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்,  மிக மன்னிப்பவன்.
·  ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைவரும்- அதாவது இப்பூமியின் மீது தோன்றிய முதல் மனிதனில் இருந்து கடைசி மனிதன்வரை அனைவரும்- மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள். அந்த நாள் தான் இறுதித்தீர்ப்பு நாள் எனப்படும்
·  எனவே இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளும் வசதிகளும் கொடுக்கப் படுகின்றன. சிலருக்கு செல்வமும் சிலருக்கு வறுமையும் சிலருக்கு ஆரோக்கியமான உடல்கட்டும் சிலருக்கு உடல் ஊனமும் என மாறி மாறி கொடுக்கப்பட்டு இங்கு மனிதர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, இங்கு அமைதி, அட்டூழியம் அக்கிரமம், நியாயம், அநியாயம் என பல சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டி வரும், இது ஒரு தற்காலிகமான சோதனைக்கூடம் என்பதால்!
மறுமை வாழ்க்கையே உண்மையானது   
21:35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது¢பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.
·  நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
·  இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்¢ அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்¢ இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
·  எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக  ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
மறுமை சாத்தியமா?
·  சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை  சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
36: 77-79 ''மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. (நபியே!) நீர் கூறுவீராக! ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று'
·  இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும்  எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
·  அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:

43:71 பொன் தட்டுகளும்கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும்,கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும்தன் சுவை மாறாத பாலாறுகளும்அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும்அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும்தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து,கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
29:58 எவர்கள் இறைநம்பிக்கைகொண்டுநற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களைசதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில்நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
நரகமும் காத்திருக்கிறது
·  சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:

7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களைஅவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
18:29  (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவேவிரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!
வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்
அடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:
2:155  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும்,பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
2:156-157    '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'
அதாவது நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்  என்ற பேருண்மையை நினைவு கூர்ந்து பொறுமை காத்து ஆக வேண்டியவற்றை கவனித்தால் நமக்கு மன நிம்மதியும் ஏற்படும், இழப்பையும் இலாபகரமானதாக மாற்ற முடியும்! .....எப்படி? 
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் கூறினார்கள்: சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட  கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான் (நூல்: முஸ்லிம்)  
நோய் வரும்போது பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனை நினைவுகூர்ந்து துதித்தால் நமது ஆரோக்கியத்தை முன்பிருந்ததைவிட இறைவனே செம்மைப் படுத்துகிறான்! இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன் என்று கூறுவான். (நூல் : முஅத்தா)
மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்:
  • மேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம் மேற்கொள்ளவும் பணிக்கிறான்.
மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
------------------------------------------------- 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html