இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?


ஆடை அணிவதும் அரைகுறையாக அணிவதும் அல்லது அறவே அணியாததும் எங்கள் உரிமை! அதைக்கேட்க நீங்கள் யார்?
= மது அருந்துவதும் அருந்தாததும் எமது உரிமை! குடிக்காதே என்று எங்களைத் தடுக்க நீ யார்?
= திருமணம் செய்துகொள்வதும் செய்யாமலே சேர்ந்து வாழ்வதும் அல்லது விபச்சாரம் செய்வதும் ஓரினச்சேர்க்கையும் எல்லாம் தனிமனித உரிமை, அதில் தலையிட உங்களுக்கு ஏது உரிமை?
= எனக்கு விருப்பமானதைச் செய்யவும் சொல்லவும் எழுதவும் எனக்கு முழு உரிமை உள்ளது, அது தனிமனித சுதந்திரம்! அல்லது பத்திரிகைச் சுதந்திரம்! அதை மறுக்க நீங்கள் யார்?
.... என்றெல்லாம் கேள்விகளும் கோஷங்களும் எழுவதை நாம் காண்கிறோம். இந்த வாதங்களில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது? இதை நாம் ஆராய்ந்தே ஆக வேண்டும். காரணம் நாம் ஒரு சமூகமாக வாழ இது பற்றிய தெளிவு மிகமிக முக்கியம். இது தெளிவாகாத வரை தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் குழப்பமும் அமைதியின்மையும்தான் மிஞ்சும்.
 யாரும் எதுவும் செய்யலாம் அல்லது யாரும் எதையும் பேசலாம் என்ற வரம்பற்ற தனிமனித சுதந்திரம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பது தெளிவு! ஏனெனில் யாரும் யாரையும் எக்காரணமும் இன்றி கொலையும் செய்யலாம் ஏசவும் செய்யலாம், எதையும் அபகரிக்கலாம் அவற்றில் எந்தக் குற்றமும் இல்லை என்றாகி விடும். அப்படி ஒரு நடைமுறை இருக்குமானால் மனித வாழ்வே சாத்தியமற்றதாக ஆகிவிடும் என்பதை நாம் அறிவோம்.
 தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் அதாவது பிறரை பாதிக்காதவற்றில் - தனி சுதந்திரம் இருப்பது உண்மையே. ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன.
எனவே  இந்த தனிமனித சுதந்திரத்தை எதுவரை அனுமதிக்கலாம்? அதை எவ்வாறு நிச்சயிப்பது? யார் நிச்சயிப்பது? .....இதை மனிதர்கள் அவர்களாகவே நிச்சயிக்க முடியுமா? அவரவர் மனோ இச்சைகளுக்கு ஏற்ப இதை நிச்சயித்தால் என்ன ஆகும்? இங்கும் குழப்பமே மிஞ்சும் என்பதை நாம் உணரலாம்.
அடுத்ததாக இதை தீர்மானிக்கும் பொறுப்பை ஒரு குடும்பத்திடமோ அல்லது இனம், மொழி, நிறம், தொழில், மற்றும் இன்னபிற அடிப்படையிலான சங்கங்களிடமோ குழுக்களிடமோ கட்சிகளிடமோ அல்லது ஒரு ஊர் நிர்வாகத்திடமோ அல்லது நாட்டை ஆள்பவர்களிடமோ விட்டால் என்ன ஆகும்? அதன் விளைவும் பயங்கரமானதாக இருக்கும். அன்றாடம் சண்டைகளும் பெரும் போர்களுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
 இறுதியாக இதற்கு என்னதான் தீர்வு? இங்குதான் நாம் முக்கியமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
 தனி மனிதனுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது? அவன் உரிமை உரிமை என்று எதைக் கோர முடியும்? அதை அறிவதற்கு முன்னால் அவனது நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இவ்வுலகில் அவனுடையது  என்று என்ன இருக்கிறது, மற்றும் அவனது அதிகாரத்தின் பலம் எவ்வளவு  என்பதை அறிந்த பின்னரே அவனது உரிமை அல்லது சுதந்திரம் பற்றி தீர்மானிக்க முடியும். மனிதன் தனது என்று எதை சொல்லிகொண்டாலும் உண்மையில் அவனது உடல், பொருள், ஆவி அல்லது உயிர் என அனைத்துமே அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளவை அல்ல என்பதை அறிவோம். அவை யாவும் இவ்வுலகைப் படைத்தவனால் அவனுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டவையே. அந்த இறைவன் அவன் நாடும்போது இவற்றைக் கொடுக்கவும் பறிக்கவும் செய்கிறான் என்பதுதான் உண்மை. எனவே மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் இவ்வுலகுக்கும் அதில் உள்ளவற்றுக்கும் உண்மையான சொந்தக்காரன் எவனோ அவன் மட்டுமே இதைத் தீர்மானிக்க முடியும். எனவே மனிதன் தானாக தன் சுதந்திரத்தை தீர்மானிக்க முடியாது என்பது தெளிவாகிறது.
 அடுத்ததாக, இறைவன் மட்டுமே அவனது படைப்பினங்களையும் அவர்களின் தேவைகளையும் பரிபூரணமாகவும் மிகமிக நுணுக்கமாகவும் அறிந்தவன். முக்காலத்தையும் முழுமையாக உணர்ந்தவன். யாருக்கு எவ்வளவு உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு ஞானம் அவனுக்கு மட்டுமே உள்ளது,
= அடுத்ததாக, இந்தத் தற்காலிக உலகம் என்பது ஒருநாள் அழியும் என்பதும் இதில் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு குறுகிய தவணையில் இங்கு வந்து போகிறான் என்பதும் அனைவரும் புரிந்துகொண்ட ஓர் உண்மை. அதாவது இவ்வுலகை ஒரு பரீட்சைக் களமாகப் படைத்துள்ளான் இறைவன். மறுமையில் இறுதித் தீர்ப்புநாள் அன்று அவரவர்க்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பற்றியும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பற்றியும் அவன் முழுமையாக விசாரிக்கவும் உள்ளான். அவற்றைப் பேணி நடப்போருக்கு  வெகுமதியாக சொர்க்க வாழ்வையும் பேணாமல் தான்தோன்றிகளாக நடப்போருக்கு தண்டனையாக நரகத்தையும் அவன் வழங்கவுள்ளான்.
 எனவே அந்த இறைவன் தரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தனிமனித உரிமைகளைத் தீர்மானிப்பதே அனைவருக்கும் சிறந்தது என்பதை நாம் அறியலாம். அந்த இறைவனின் கட்டளையும் அதுவே. இதோ தனது இறுதி வேதமாம் திருக்குஆனில் அவன் கூறுவதைப் பாருங்கள்:
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
அவ்வாறு மனித உரிமைகளை நியாயமான முறையில் பக்குவமாகப் பங்கிடக்கூடியவன் படைத்த இறைவன் மட்டுமே என்பதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகில் அமைதியைக் காண முடியும், மேலும் மறுமையிலும் நாம் அமைதியான வாழ்வை அதாவது சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். மாறாக தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நமது மனோ இச்சைகளைப் பின்பற்றி இறைவன் விதித்த வரம்புகளுக்கு மாறாக நடந்தால் இவ்வுலகின் உரிமையாளன் நிச்சயமாக தண்டிப்பான். 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_7.html 
பற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html 
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!!

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இதயங்கள் இணையட்டும்! - பாகம் 1


எங்கள் உடன்பிறவா சகோதர சகோதரிகளே!
  நாம் இன்று ஒரே நாட்டில் பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்டவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேசுவோராகவும் பல்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டோராகவும் உள்ளோம். இப்படிப்பட்ட சூழலில் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் நாம் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளைப் பற்றி பரஸ்பரம் அறிந்து கொள்வதும் மிக மிக அவசியம். அதுவே நம்மிடையே இன்று நிலவி வரும் இனம்புரியாத வெறுப்புணர்வையும் பகைமையையும்  நீக்க உதவும். அப்போதுதான் இப்பகைமை எனும் தீயை மேலும் வளர்த்து நமக்குள் கலவரங்கள் மூட்டி அதனால் வயிறு வளர்க்கும் சுயநல சக்திகளையும் அரசியல்வாதிகளையும் வேரறுக்கவும் முடியும். முறிந்து கிடக்கும் நம் உறவுகளை வலுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் மனம்திறந்து உங்களோடு நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
 உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவு பற்றிய உண்மையை இங்கு நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். அதாவது, நாம் அனைவரும் ஒரே இறைவனால் ஒரே தாய் தந்தையில் இருந்து உருவாக்கப்பட்டு அவர்களிருந்து வாழையடி வாழையாக உருவாகி பூமியெங்கும் பரவி வாழ்ந்து கொண்டிருப்பவர்களே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதை ஒருபோதும் மறந்து விடகூடாது.  நமக்குள் கருத்து வேறுபாடுகளும் நமது நம்பிக்கைகளும் கலாசார வேறுபாடுகளும் ஆயிரம் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற உண்மையை ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

  இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் உங்கள் உள்ளங்களில் பல சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும்  கேள்விகளும் இருக்க வாய்ப்புண்டு. அவற்றை தெளிவு படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதற்காகவே இந்த தொடர். உங்கள் கேள்விகளுக்கான பதில்களை ஆராயும் முன் நாங்கள் பின்பற்றி வரக்கூடிய இஸ்லாம் என்ற மார்க்கத்தைப் பற்றி சில அடிப்படை உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது இங்கு மிக மிக அவசியம் என்பதை உணர்கிறோம். அப்போதுதான் நம் பதிலில் இருக்கக் கூடிய நியாயத்தை நீங்கள் உணரமுடியும்.

இஸ்லாம் என்றால் என்ன?
  . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்  
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

   முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது!  .
ஆக, இந்த அடிப்படையில்  இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி.......  மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.

இஸ்லாம் புதிதல்ல!

ஆம், அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கமும் அல்ல என்ற உண்மையை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களில் பெரும்பாலோர் இன்றும் இது ஒரு புதிய மார்க்கம் என்றும் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நம்பி வருகின்றனர். இன்றும் கூட இந்தத் தவறு பள்ளிக்கூடப்  பாட புத்தகங்களில்  திருத்தப்படாமலே  தொடர்கிறது.    

ஆம், அன்புக்குரியவர்களே, நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது.  அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தா.ன் இஸ்லாம் என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது. மாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.

 இந்த இறைவனின் மார்க்கம் முக்கியமாக மூன்று நம்பிக்கைகளை முன்வைக்கிறது. இவை எல்லாக் காலங்களிலும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வந்த இறைவனின் தூதர்களால் அந்தந்த மக்களுக்கு போதிக்கப்பட்டது. அவை இவையே:
1). இறை ஏகத்துவம்: அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே! அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் மட்டுமே பிரார்த்தனைகளை ஏற்கக்கூடியவன். அவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும்.  அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. அவை அனைத்தும் அழியக்கூடியவையே. தன்னிகரில்லாத மற்றும் தனக்கு உவமையே இல்லாத இறைவனுக்கு கற்பனை உருவங்கள் சமைப்பதோ அல்லது உயிரும் உணர்வும் அற்ற பொருட்களைக்  காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ பெரும் பாவமும் வீணும் வழிகேடும்  ஆகும்.

 2). மறுமை : இவ்வுலக வாழ்வு என்பது குறுகியதும் 
தற்காலிகமானதும் மனிதனுக்கு ஒரு பரீட்ச்சை போன்றதும் ஆகும்.. இங்கு அவன் செய்யும்  செயல்கள் யாவும் பதிவு செய்யப் படுகின்றன. இவ்வுலகம் ஒருநாள் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் நீதி விசாரணைக்காக எழுப்பப்பட்டு  அவர்கள் செய்த பாவங்களும் புண்ணியங்களும் காண்பிக்கப் படுவார்கள். அன்று புண்ணியங்களை  அதிகமாகச் செய்தோருக்கு சொர்க்கமும் பாவங்களை அதிகமாகச் செய்தோருக்கு நரகமும் விதிக்கப் படும். அதுவே மனிதனின் நிரந்தரமான  உண்மையான வாழ்விடம் ஆகும்.
3) தூதுத்துவம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்களே. அவர்கள் எங்கிருந்த போதும் எவ்வாறு பரவியபோதும் ஒரே மனிதகுடும்பத்தின் அங்கங்களே! அவர்களுக்கு இறைச் செய்திகளை அறிவிக்கவும் வழிகாட்டவும் இறைவன் அவ்வப்போது அவர்களிலிருந்தே சிறந்த மனிதர்களைத்  தேர்ந்தேடுத்து  அவர்களைத் தன் தூதர்களாக நியமிக்கிறான். அனைத்து காலங்களிலும்  அனைத்து நாடுகளுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள். அவர்களின் வரிசையில் இவ்வுலகுக்கு இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். இவருக்கு முன் வந்து சென்றவர் இயேசு நாதர். இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே கிடையாது என்கிறது இஸ்லாம்.(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

வியாழன், 20 செப்டம்பர், 2012

மாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்!

இன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும்  அகில உலகத்துக்கும் அருட்கொடையாக  இறைவனால் தனது இறுதித் தூதராகத் அனுப்பப்பட்டரும் ஆன முஹம்மது  நபி (ஸல்) அவர்களின் உருவப் படங்களோ உருவச்சிலைகளோ எங்குமே இல்லை. அவரைக் கண்ணால் காணாமலே அவர் மீது பேரன்பும் நேசமும் கொள்வது மட்டுமல்ல, அவர் வாழ்ந்திருந்த போது கூறிய ஒவ்வொரு அறிவுரைகளையும் கட்டளைகளையும் செவிசாய்த்துக் கேட்பதோடு அவற்றை அப்படியே பின்பற்றத் துடிப்பவர்கள் இந்த மக்கள்! அவர்கள்  எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?
இதோ, இவ்வுலகின் அதிபதியின் கூற்றிலிருந்தே அறிவோமே!
அவரைப் பற்றி அவரைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்து அனுப்பிய இறைவன் எதைச் சொல்கிறானோ அதுதானே உண்மையிலும் உண்மை! நியாயத் தீர்ப்புநாளின் அதிபதியும் அவனல்லவா?
= நேரான பாதையில் உள்ளார்  
36:1-4 .யாஸீன். ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
= இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்
7:158 .(நபியே!) நீர் கூறுவீராக ''மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் இறைவனின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, இறைவன்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரும் இறைவன் மீதும் அவன் வசனங்களின் மீதும் நம்பிக்கை கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.''

 = நற்குண வேந்தர் நபிகளார்!
68:4  .மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
=  அகிலத்தாருக்கு ஓர் அரிய அருட்கொடை
21:107.     (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
3:164 .நிச்சயமாக இறைவன் இறைநம்பிக்கையாளர்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
= மனிதகுலத்தை உய்விக்க வந்தவர்
7:157 .எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
= மனிதர்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி
33:21 .இறைவன் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, இறைவனை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
= மக்களின் துன்பப்படுவது கண்டு வருந்துபவர்  
9:128 .(இறை விசுவாசிகளே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
= திருந்தாத மக்களுக்காக அதிகம் வருந்தியவர்
18:6  .     (நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!
26:3  .(நபியே!) அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் ஆகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொண்வீர் போலும்!

= இறை நேசத்திற்கும் பாவ மன்னிப்புக்கும் வழியாக இருப்பவர்
3:31  .(நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் இறைவனை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்;. இறைவன் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
4:80  .எவர் (இறைவனின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் இறைவனுக்குக் கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
= அவரை எதிர்ப்போர் இழிவடைவர்
58:5  .எவர்கள் இறைவனையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப் பட்டதைப் போல் இழிவாக்கப்ப படுவார்கள் - திடமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். சத்தியத்தை மறுப்பவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
= அவர் வழியை ஏற்க மறுத்தால் நரகம்
4:115 .எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (இறைவனின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, இறைநம்பிக்கையாளர்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

பயங்கரவாதிகள் யார்?



  தர்மத்தை நிலை நாட்டும் பணியில் நல்லோர்கள் ஈடுபடும்போது அது அதர்மத்தை முதலீடாக வைத்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் தீயோரால் முழுமூச்சாக எதிர்க்கப்படும் என்பதை நாமறிவோம்.. அவர்களால்  அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனெனில் தர்மம் வளர்ந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்கள். மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் பிறகு தங்களின் மோசடித் தொழிலும் சுரண்டல் வியாபாரங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனபதையும் தங்களின் ஏகாதிபத்தியம் ஆட்டம் காணும் என்பதையும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் அக்கொடியோர்கள்.
தர்மம் பரவும்போது என்ன நடக்கும்?
மக்கள் ஏக இறைவனை மட்டுமே தங்களுடைய வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுக் கொள்வார்கள். அந்த இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு பூமியில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் பாடுபடுவார்கள்.. பூமியில் மானிட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டவும் கலகங்களும் குழப்பங்களும் அற்ற அமைதிமிக்க வாழ்வை நிலைநிறுத்தவும் தன்னலம் கருதாது ஈடுபடுவார்கள். இம்முயற்சியில் தங்கள் உயிர்களையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.
தர்மம் பூமியில் நிலைநாட்டப் பட்டால்...
=  அங்கு இனம் மொழி, நிறம் இவற்றின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் மறைந்து மனித சகோதரத்துவம் நிலைபெறும். இழந்து போன மனித உரிமைகள் மீட்டுக் கொடுக்கப்படும்.
= கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, இலஞ்சம், ஊழல், சூதாட்டங்கள் பதுக்கல். கலப்படம் போன்றவை ஒழியும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனி யாரும் பிழைப்பு நடத்த முடியாது.
= மது, போதை, விபச்சாரம், கள்ளக்காதல்கள், பெண்ணடிமைத்தனம்  போன்றவை ஒழியும். ஒழுக்கம் நிறைந்த குடும்ப வாழ்வும் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சமூக வாழ்வுமுறையும் அங்கு உடலேடுக்கும்.
=, கடவுளின் பெயரால் பாமரர்களைச் சுரண்டும் இடைத்தரகர்கள் ஒழிவார்கள். செலவற்ற எளிமையான இறைவழிபாட்டு முறை அமுலுக்கு வரும். மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழியும்.
= இடைத்தரகர்களும் நாடாள்வோரும் இணைந்து கடவுளின் பெயராலோ அல்லது மூடநம்பிக்கைகளின் பெயராலோ மக்களை கொள்ளையடிப்பதும் நாட்டு வளங்களை அபகரிப்பதும் வீண்விரயம் செய்வதும் நிற்கும். அவை ஆக்கபூர்வமான வழிகளில் செலவிடப்படும். 
= வல்லரசு நாடுகள் தங்கள் இராணுவ வல்லமையைக் காட்டி நலிந்த நாடுகளின் வளங்களைக் கொள்ளை அடித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமை முற்றுப்பெறும். அரசு பயங்கரவாத அராஜகங்கள் அழிந்துவிடும்.
= இன்னும் அணுஆயுதம் அறிவியல், ஊடகங்கள் இவற்றின் மேன்மையை பயன்படுத்தி நலிந்த நாடுகளிக்கிடையே போர் மூட்டுவதும் உலகின் இயற்கை வளங்களில் நஞ்சூட்டி கொள்ளைகள் அடிப்பதும் இன்னும் இதுபோன்ற பல கொடுமைகள் முடிவுக்கு வரும்.

இப்போது நீங்களே கூறுங்கள், தர்மத்தை  நிலைநாட்ட யாரேனும் பாடுபட்டால் அதை கொடுங்கோலர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் இதை முழுமூச்சாக எதிர்ப்பார்கள். எப்படியெல்லாம் முடியுமோ அனைத்து வழிகளையும் தந்திரங்களையும் உபயோகித்து தர்மம் வளர்வதை முடக்கிப்போடும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
அதுதான் இன்று நடந்துகொண்டு இருக்கிறது. 
உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும்  இன்னபிற இராணுவத் தளவாடங்கள்  இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.
ஆயுதங்களை  உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)

   அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்த்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.
 
 இப்போது கூறுங்கள், யார் பயங்கரவாதிகள்? இவர்களா?  இல்லை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தங்களது நாட்டை மீட்பதற்காகப் போராடுபவர்கள்களா? அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா? அல்லது தங்களது நாடுகளில் இவர்களின் கைப்பாவை அதிபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாட்டையும் நாட்டின் வளங்களையும் காப்பாற்றுவதற்காக முனைபவர்களா?
ஆனால் என்ன நடக்கிறது? இன்று ஊடகங்களின் ஆதிக்க பலத்தினால் உலகளாவிய முறையில்  கொடுங்கோலர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் மீட்பதற்காகவும் சமாதானத்தை நிலைநாட்டவும் போராடுபவர்கள் பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். 

திருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்!


“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு!”
“இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு!”
என்றெல்லாம் இங்கு தமிழில் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைப் போன்றே வெவ்வேறு இந்திய மொழிகளிலும் நாடெங்கும் மக்கள் பாடி மகிழ்கிறார்கள். மதம்,, நிறம், மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டு நின்றாலும் அந்த வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது பாருக்குள்ளே பாரதம் மட்டும்தான்! அதனால்தான் நாம் பெருமைப் படுகிறோம், இம்மண்ணில் பிறந்ததற்காக! ஆனால் உண்மையில் இந்தப் பெருமையை நமக்கு தேடித் தந்தது யார்?
= இந்நாட்டை தங்கள் காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப் படுத்தி நாட்டு வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றவர்களா?
= அதற்கு முன்னர் நாடுகளைப் பிடிக்கும் நோக்கோடு இந்திய மண்ணுக்குள் கால்பதித்த முகலாயர்களா?
=அல்லது அதற்கும் முன்னதாக கைபர் கணவாய் மூலமாக நாடோடிகளாக வந்து தங்கள் மதநம்பிக்கைகளைப் மக்களிடையே பரப்பி அவர்களை மேல்சாதி கீழ்ஜாதி என்றெல்லாம் கூறுபோட்டவர்களா?
...... கண்டிப்பாக இவர்கள் யாருமே இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் கிடையாது. மாறாக அவர்களின் சுயநல நோக்கோடுதான் அவர்கள் இம்மாண்ணுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் நம் மீது தத்தமது அடிமைத்தளைகளை விதைத்து நம் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள், அனுபவித்தார்கள் இன்னும் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நாட்டு வளங்களை குறிவைத்தே இவர்கள் இந்நாட்டுக்குள் நுழைந்தார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. மாறாக பிரிவினை மூலம் எவ்வாறு ஆதாயம் அடைவது என்ற சுயநலம்தான் இவர்களை ஆட்கொண்டது. அதன் தீய விளைவுகளை இன்றும் அனுபவித்து வருகிறோம். இவை ஒருபுறம் இருக்க இவர்களின் நுழைவால் நாட்டுக்கு சில நன்மைகளும் நேர்ந்துள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றிற்கு காரணம் இவர்களல்ல, மாறாக இவர்கள் மூலம் இந்நாட்டுக்குள் நுழைந்த வேதங்களும் தத்துவங்களும்தான் அவை.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு நம் நாட்டில் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராயும்போது பலரும் தங்கள் பங்களிப்பை ஆற்றியிருந்தாலும் நமக்கு கண்கூடாகத் தெரிவது திருமறைக் குர்ஆன்தான். சுயநல சக்திகள் பல மக்களுக்குள் ஜாதி, மொழி, இனம், நாடு, ஊர் என்ற அடிப்படையில் பிரிவினைகளைத் தூண்டி ஆதாயம் தேட முனைந்தாலும் அவற்றைத் தடுக்கும் சக்தியாக திருக்குர்ஆன் நிற்பதைக் காணலாம்.
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு மனிதகுல ஒற்றுமையைப் பறைசாற்றி நிற்கிறது குர்ஆன். இந்த மண்ணிற்கு வந்த எந்த வேதமும் கூறாத ஒன்று இது! முன்னாள் இறை வேதங்களை சுயநல சக்திகள் திரித்து மக்களை ஜாதி ஜாதியாகப் பிரித்துக் கூறுபோட்டு ஆதாயம் தேடிக்கொண்டு இருந்த வேளையில்தான் இந்த தூய இறைமறை இந்நாட்டு மக்களைக் காப்பாற்றும் அரணாக வந்து நின்றது.
சகோதரத்துவமும் சமத்துவமும்
= இவ்வேதத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே இனம், மொழி, நிறம், குலம், கோத்திரம் என்ற பிரிவினை உணர்வுகளை இது துடைத்தெறிகிறது.  அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற சகோதர உணர்வை மேலோங்கச் செய்து மக்கள் செயற்கையாகக் கற்பிக்கக் கூடிய ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் ஆக்குகிறது. இவ்வாறு மானிட சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் ஒருசேர நிலைநாட்டுகிறது இவ்வேதம். பள்ளிவாசல்களில் எந்தப் பாகுபாடுகளுக்கும் இடம் கொடாமல் தோளோடு தோள் சேர்ந்து  வரிசைகளில் நின்று மக்கள் தொழுகை நடத்துவதைக் காணாதவர் இருக்க முடியாது.
தீண்டாமை ஒழிப்பு
= ஜாதிகளை ஒழிக்கவும் தீண்டாமையை ஒழிக்கவும் பெரியார், அம்பத்கர் போன்ற பெரும் சீர்திருத்தவாதிகள் தங்கள் முழு வாழ்நாட்களையும்  செலவிட்டதை இந்நாடு கண்டது.. ஆனால் அவர்களால் மக்களிடையே விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்த முடிந்ததே தவிர இத்தீமைகளை ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் திருக்குர்ஆன் தான் முன்வைக்கும் “மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே அவர்களைப் படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்” என்ற ஆணித்தரமான கொள்கையை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே அந்த மனிதனை இத்தீமைகளிருந்து விடுவிக்கவும் பாதுகாக்கவும் செய்கிறது. அருளப்பட்ட நாள் முதல் உலகெங்கும் மனிதர்களிடையே நடத்திவரும் புரட்சியை அது இம்மண்ணிலும் நிகழ்த்தியது, தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அமேரிக்கா ஆப்ரிக்கா கண்டங்களில் வெள்ளையர்களையும் கறுப்பின மக்களையும் அவர்களிடையே தீண்டாமையை நீக்கி அவர்களை ஐவேளைத் தொழுகைகளில் அணிசேர வைக்கிறது, ஒரே தட்டில் இருந்து உணவைப் பகிர்ந்து உண்ணவும் வைக்கிறது இந்த இறைவனின் திருமறை! மேலும் வருடம் ஒருமுறை உலகின் மையப்பகுதியாம் மக்கா நகரில் ஹஜ்ஜின் போது மனிதகுலத்தின் அனைத்து இனத்தவரையும், நிறத்தவரையும், மொழியினரையும், தேசத்தவர்களையும் ஒரே சீருடையில் அணிவகுக்கச் செய்து அழகு பார்க்கிறது இந்த ஒப்பிலா அற்புதமாம் திருக்குர்ஆன்!
மூடநம்பிக்கை மற்றும் சுரண்டல் ஒழிப்பு
= ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையோடு இறைவனை இடைத்தரகர்கள் இன்றியும்  வீண் சடங்குசம்பிரதாயங்கள் இன்றியும் வணங்கக் கற்றுக் கொடுப்பதால் மூடநம்பிக்கைகளில் இருந்தும் கடவுளின் பெயரால் சுரண்டப்படுவதிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கிறது இந்த திருக்குர்ஆன்! 
சுயமரியாதை
= படைத்தவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதால் அவர்களை ஒரே நேரத்தில் பயபக்தி உள்ளவர்களாகவும் அஞ்சா நெஞ்சர்களாகவும் சுயமரியாதை மிக்கவர்களாகவும் ஆக்குகிறது திருக்குர்ஆன்!
பொறுப்புணர்வு
= சமூகத்தில் நன்மையை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் இறைவழிபாட்டின் அம்சங்களாகக் கற்றுக் கொடுப்பதால் மக்களை சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும் கடமை உணர்வு உள்ளவர்களாகவும் வார்த்தெடுக்கிறது இந்த வான்மறை!
உரிமை மீட்பு
= திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்ளாத மக்களிடையேயும் தன் அழகிய தாக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதையும் நாம் காணலாம். உதாரணமாக நம் நாட்டில் மேல்தட்டு மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளைப் பற்றி உணரவும் அரசு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தக்க இட ஒதுக்கீடுகளைத் தரவும் தூண்டுகோலாக அமைந்தது இந்தக் குர்ஆனின் தாக்கமே என்றால் மிகையாகாது.
பரந்த சகோதரத்துவம்
= மனிதன் என்ற முறையில் கருத்துவேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் பல இருந்தாலும் சக மனிதனை தனது சகோதரனாகவே கண்டு உறவாடக் கற்றுக் கொடுக்கிறது இம்மறை. சக மனிதன் எவ்வளவுதான் தீய எதிரியாக இருந்தாலும் எதிர்க்கப் படவேண்டியது அவனல்ல, மாறாக அவனுக்குள் நுழைந்து விட்ட ஷைத்தான்தான் என்ற அழகிய சீர்திருத்தக் கொள்கையை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.
இவற்றைப் போல இந்த இறைமறை வளர்த்திடும் இனிய பண்புகள் ஏராளம்! ஏராளம்! இம்மண்ணின் மைந்தர்கள் அவற்றை உரமூட்டி வளர்த்திட்டால்,  இறைவன் நாடினால் “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று முழங்கும் நாள் தூரத்தில் இல்லை! 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html 
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

வியாழன், 13 செப்டம்பர், 2012

இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?

Related image
இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?
= இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்கு அக்கிரமங்கள் நடக்குமா?
= இறைவிசுவாசிகளுக்கு ஏன் நோய்கள் மற்றும் இன்னபிற துன்பங்கள் நேர்கின்றன?
= கடவுளை நம்பாதவர்களும் கடவுளைக் கும்பிடாதவர்களும் நன்றாகத்தானே வாழ்கிறார்கள்? அவர்களுக்குக் கடவுளை வணங்காததால் எந்த இழப்பும் நடப்பதில்லையே?

இது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுவது இயல்பே. ஆனால் பெரும்பாலோர் இது கடவுள் நம்பிக்கை. இதில் கேள்விகள் கேட்கக்கூடாது. கடவுளைப் பற்றிய  நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி தங்களைத்தாங்களே சமாதானப்படுத்தி சிந்திக்காமல் இருந்து வருகிறார்கள். இது பற்றிய தெளிவின்மை நாளடைவில் இவர்களை நாத்திகத்திற்க்குக் கொண்டு சென்று விடுகிறது.
ஆனால் உண்மையான இறைமார்க்கம் இவற்றுக்குத் தெளிவான விளக்கங்களைத் தருகிறது. பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து இதற்கான தெளிவைப் பெறவைக்கிறது.

மேற்க்கண்ட சந்தேகங்கள் எழுவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால். அது இவ்வுலகம்தான் எல்லாமே, இதற்கப்பால் ஒன்றும் கிடையாது என்ற குறுகிய கண்ணோட்டம்தான்!
ஒரு கிணற்றில் பிறந்து வளர்ந்த இரண்டு தவளைகள் அந்தக் கிணற்றின் ஆழ  அகலங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தன. அப்போது மேலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக இறக்கப்பட்ட வாளி தண்ணீரோடு இத்தவளைகளையும் அள்ளிச்சென்றது. கிணற்றுக்கு வெளியே வந்து விழுந்த தவளைகள் சுற்றும்முற்றும் பார்த்து வியப்படைந்தன. அப்போதுதான் தங்கள் கிணறு என்பது இவ்வூரில் எவ்வளவு சிறிய இடம் என்பதை உணர்ந்தன.
 இப்போது அந்தத் தவளைகளை ஒரு பறக்கும் வாகனத்தில் ஏற்றிச் மேலே சென்று காண்பித்தால் அப்போது அவை உணரும் இந்த ஊர் என்பது மாவட்டத்தின்  ஒரு பாகம் என்பதை. இன்னும் மேலே செல்லச் செல்ல தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் புலப்படும். பிறகு இந்தியா, ஆசியாக் கண்டம், இன்ன பிற கண்டங்கள் புலப்படும், இன்னும் மேலே செல்லச் செல்ல  பூமி ஓர் பந்து போன்ற உருண்டை என்பதும் இந்த பூமி சூரியகுடும்பத்தின் ஓர் அங்கம் என்பதும் இப்பரந்த பிரபஞ்சத்தின் ஒரு மிக மிக நுண்ணிய ஒரு துகளே தங்கள் வாசித்திருந்த பூமி என்பதுமெல்லாம்  அந்த கிணற்றுத்தவளைகளுக்குப் புலப்படும்.
அந்தக் கிணற்றுத் தவளைகள் போன்ற நிலையில்தான் நம்மில் பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் தங்கள் அறிவுக்கும் சிந்தைக்கும் பூட்டுபோட்டு அடக்கி வைத்து இவ்வுலகின் இயல்பை சிந்திக்க மறுக்கிறோம். இது தவறு. இப்படிப்பட்ட குறுகிய சிந்தனை இப்படிப்பட்டவர்களை இறைவ.னைப் பற்றியும் அவனது திட்டங்களைப் பற்றியும் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இவ்வாழ்க்கையின் உண்மை நிலையை கண்மூடிக்கொண்டு மறுப்பதன் விளைவாக முடிவில் அவர்கள் நரக நெருப்புக்கு இரையாகிறார்கள்.
வாருங்கள் சற்று பரந்த மனப்பான்மையோடு சிந்திப்போம்.....
 இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறையில் இறைவன் கூறுகிறான்:
2:164  .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? அவ்வாறு சிந்திக்கும்போது இறைத்தூதர்க்ளும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப் பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப் படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்! எனவே இங்கு செல்வமும் வறுமையும் நல்லவையும் தீயவையும் நியாயமும் அநியாயமும் நம் முன் மாறிமாறி வரும். நல்லோர்களுக்குத் துன்பமும் தீயோர்களுக்கு இன்பமும் கிடைப்பதெல்லாம் இங்கு சகஜம். ஆனால் அவற்றைப் பார்த்துவிட்டு அவசரமாக எந்த முடிவுக்கும் நாம் வந்துவிடக்கூடாது. ‘இறைவனே இல்லைஎன்றும் இறைவன் இருந்திருந்தால் இந்த அநியாயம் நடக்குமா?’ என்றெல்லாம் பிதற்றுவது அறியாமையின் வெளிப்பாடுகளே!
உடனுக்குடன் தண்டித்தால் என்ன ஆகும்?
 ஒரு பரீட்சைக் கூடத்தில் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏதேனும் மாணவன் தவறாக விடைஎழுதிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மேற்பார்வையாளர் உடனே குறுக்கிட்டு அந்த மாணவனைத் திருத்தினாலோ அல்லது அவனை உடனேயே தண்டித்தாலோ அங்கு பரீட்சையின் நோக்கம் நிறைவேறுமா? அதைப்போன்றதுதான் இறைவன் நடத்திவரும் பரீட்சையும்! இறைவன் இவ்வுலகு என்ற பரீட்சைக் கூடத்திற்கு ஒரு தவணையை நிச்சயித்துள்ளான். அக்கூடத்திற்குள்  வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு தவணைகளை நிச்சயித்துள்ளான். அனைவருக்கும் அதை முழுமிக்க வாய்ப்பளிக்கிறான். ஒருசிலர் அவசரப் படுவதுபோல இறைவன் விரைந்து ஏன் தண்டிப்பதில்லை? இறைவனே தன் திருமறையில் கூறுகிறான். 
மனிதர்களுடைய அநீதியின் காரண மாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)
உமது இறைவன் மன்னிப்பவன்; இரக்கமுள்ளவன். அவர்கள் செய்ததற்காக அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் அவர்களது வேதனையை விரைந்து வழங்கியிருப்பான். மாறாக அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்புமிடத்தைப் பெற மாட்டார்கள். . (திருக்குர்ஆன் 18:58.)
என்று தணியும் நீதியின் வேட்கை?
  இப்பரீட்சைக்கூடம் ஒருநாள் மூடப்படும். அதற்குப்  பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது இப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகும். அன்று முதல்மனிதன்  முதல் இறுதிமனிதன் வரை அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள். அன்றுதான் இறுதித் தீர்ப்புநாள் ஏற்படுத்தப் படுகிறது. யார் பரீட்சையில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் தொல்வியுறுவோருக்கு  நரகமும் விதிக்கப்படும்.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185..)
ஆம், அன்றுதான் நீதியின் வேட்கை முழுமை பெறும். அன்று இவ்வுலகில் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளும் மோசடிகளும் மனித உரிமை மீறல்களும் ஒன்றுவிடாமல் வெளிப்படும். அவை யாருமே பார்க்க முடியாது என்று நினைத்து இரகசியமாக செய்யப்பட்டவையானாலும் சரியே. தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற மமதையில் அதிகாரம் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் மீது தொடுத்த அத்துமீறல்கள் ஆனாலும் சரியே. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அனைவருக்கும் அவரவர் உரிமைகள் முழுமையாக மீட்டப்படும். எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு சின்னஞ்சிறு உரிமைமீறல்களும் கணக்கு தீர்க்கப்பட்டுவிடும்.
நியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.
(நூல்: முஸ்லிம் 4679)

அதாவது ஒரு ஆடு இன்னொரு ஆட்டை முட்டித் தாக்கியிருந்தால் முட்டப்பட்ட ஆடு முட்டிய ஆட்டைத் தாக்கும் வாய்ப்பை அன்று இறைவன் வழங்குவான்.
 இவ்வுலகைப் பொறுத்தவரையில் இதுதான் இறைவனின் ஏற்பாடு. இதைத் தட்டிக்கேட்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது. நாம் மிகமிக அற்பமானவர்கள். நம் சிற்றறிவைக் கொண்டு இப்பரந்த பிரபஞ்சத்தின் படைப்பாளனின் திட்டங்களை ஆராயவும் எடைபோடவும் முடியாது என்பதை ஒப்புக்கொண்டு அவன் தனது தூதர்கள் மூலமாக எதை அறிவித்துத் தருகிறானோ அவற்றை அப்படியே ஏற்பதுதான் அறிவுடைமை! 
================ 
இஸ்லாம் என்றால் என்ன?
அல்லாஹ் என்றால் யார்?
http://www.quranmalar.com/2012/10/blog-post_8.html